அணைக்கட்டு அருகே அதிகாரிகள் அலட்சியம் ஏரிக்கால்வாய் தூர்வாரிய கிராம மக்கள்: சொந்த பணம் செலவழித்தனர்

அணைக்கட்டு: அணைக்கட்டு அருகே அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டியதால், சொந்த பணம் செலவழித்து கிராம மக்கள் ஏரிக்கால்வாயை தூர்வாரினர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு  ஒன்றியத்திற்குட்பட்ட விரிஞ்சிபுரம், செதுவாலை, சத்தியமங்கலம் ஏரிகள் நிரம்பி கோடி போனது. ஆனால் பொய்கை அடுத்த நாட்டார்மங்கலம், சுக்கந்தாங்கல் ஏரிகள் நிரம்பவில்லை. எனவே ‘நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி 2 ஏரிகளுக்கும் தண்ணீர் வர ஏற்பாடு செய்ய வேண்டும்’ என அந்தந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினரிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லையாம்.இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே வீணாக செல்லும் தண்ணீரை சொந்த செலவில் ஏரிக்கு கொண்டு வர கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, பம்ப் செட் வைத்திருப்பவர்களிடம் தலா 1,500 வீதம் வசூல் செய்தனர். தொடர்ந்து நேற்று கிராம மக்கள், ஊர் இளைஞர்கள் சேர்ந்து ஏரி கால்வாய்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கரை உடைந்து வீணாக தண்ணீர் வெளியேறும் இடத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீரை ஏரிக்கு திருப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இனியும், பொதுப்பணிதுறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளை நம்பி இருந்தால், ஏரிக்கு தண்ணீர் வராது என கிராம மக்கள் ஊர் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து எடுத்த முடிவு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.எனவே இனியாவது அரசு துறை அதிகாரிகள் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளுக்குட்பட்ட தூர்வாரப்படாத கால்வாய்களை தூர்வாரி தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். …

Related posts

குன்னூர் சுற்றுவட்டாரத்தில் கனமழை..!!

மனித சங்கிலி போராட்டத்தில் மோதல் அதிமுக நிர்வாகிகள் ஆபாச அர்ச்சனை: பெண்கள் காதை மூடி ஓட்டம்

விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே ரூ.6,431 கோடியில் போடப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில் மீண்டும் விரிசல்: அச்சத்தில் மக்கள்