அணுகுண்டு போல் வெடிக்கும் உணவு பொருள் விலை உயர்வு அங்கே அடி; இங்கே இடி: உலகையே உலுக்கும் உக்ரைன் போர்

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் ஒன்றரை மாதமாக நடந்து வருகிறது. ரஷ்யாவின் கொடூர தாக்குதலால் உக்ரைன் நாடே உருக்குலைத்துள்ளது. அங்கிருந்து 44 லட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறி உள்ளனர். உள்நாட்டிலேயே 65 லட்சம் பேர் சொந்த ஊர்களை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர். இந்த போரை தொடுத்ததற்காக ரஷ்யா மீது உலக நாடுகள் பல பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ரஷ்யாவிடமிருந்து பல நாடுகள் வர்த்தக உறவை துண்டித்துள்ளன. இத்தகைய பொருளாதார தடையால், ரஷ்யாவுக்கு பாதிப்பு ஏற்பட்டதோ இல்லையா, உக்ரைன் போரால் ஒட்டுமொத்த உலகமே பாதிக்கப்பட்டிருப்பதுதான் உண்மை. இது வெறும் இரு நாடுகளுக்கு இடையேயான போராக இல்லாமல், ஒட்டுமொத்த உலகின் உணவு விநியோக சங்கிலிக்கே வேட்டு வைத்துள்ளது. உணவுத் துறையை பொருத்த வரையில், உலகின் கோதுமை தேவையில் 25 சதவீதத்தை ரஷ்யாவும், 30 சதவீதத்தை உக்ரைனும் பூர்த்தி செய்து வருகின்றன. மேற்கத்திய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கோதுமையின் தேவை அதிகம். உலகின் சூரியகாந்தி எண்ணெய் தேவையில் 60 சதவீதத்தை உக்ரைன் மட்டுமே பூர்த்தி செய்கிறது. பார்லியில் 30 சதவீதத்தை ரஷ்யா பூர்த்தி செய்கிறது.இதுமட்டுமில்லாமல், 35 முக்கிய கனிம வளங்களை உலகுக்கே சப்ளை செய்யும் முக்கிய நாடாக ரஷ்யா இருந்து வருகிறது. பலேடியம் உள்ளிட்ட பிளாட்டினம் வகை தனிமங்களின் தாதுக்கள் மிக அரிதானவை. இதன் உலக தேவையில் 30 சதவீதத்தை ரஷ்யா பூர்த்தி செய்கிறது. இந்த பலேடியம்தான் மோட்டார் வாகன இயந்திரங்களில் வினைத்திறன் மாற்றிகளாக பயன்படுத்துப்படுகின்றன. வாகனங்கள் வெளியிடும் புகையில் 90% அளவிற்கு நச்சு நீக்கப்பட்ட வேதிப்பொருட்களாக மாற்றி வெளியிட இத்தனிமம் உதவுகிறது. டைட்டானியத்தில் 13 சதவீதத்தையும், நிக்கலில் 11 சதவீதமும் ரஷ்யாவிடம் இருந்தே கிடைக்கிறது. கச்சா எண்ணெய் விநியோகத்திலும் ரஷ்யா உலக அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது.தற்போது போர் காரணமாக உக்ரைனின் கருங்கடல், அசோவ் கடல் பகுதி துறைமுகங்கள் வழியாக எந்த வர்த்தகமும் நடக்கவில்லை. அங்கிருந்து கோதுமை, சூரிய காந்தி எண்ணெய் வித்துக்கள் ஏற்றுமதி முழுமையாக நின்று விட்டது. ரஷ்யா மீதான தடை காரணமாக அங்கிருந்தும் பொருட்கள் ஏற்றுமதி பெரும்பாலும் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக, சூரிய காந்தி, பாமாயில் போன்ற எண்ணெய்களின் விலை உலகம் முழுவதும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு உணவுப் பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. பலேடியம் விநியோக குளறுபடியால் வாகனங்களின் விலை அதிகரித்துள்ளது.கடந்த 1990ம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் உலகளாவிய உணவு விலை குறியீட்டை ஐநா வெளியிட்டுள்ளது. அதில் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடந்த மார்ச் மாதம் 159.3 புள்ளிகளாக உணவு விலைக்குறியீடு அதிகரித்துள்ளது. பிப்ரவரியை விட 12.6 சதவீதம் விலை அதிகரித்துள்ளது. கோதுமை, ஓட்ஸ், பார்லி மற்றும் சோளம் போன்ற தானியங்களின் விலை 17.1 சதவீதம் உயர்ந்துள்ளது. தாவர எண்ணெய்களுக்கான விலைக் குறியீடு 23.2 சதவீதம் உயர்ந்துள்ளது. இறைச்சி மற்றும் பால் விலைக் குறியீடுகளும், மார்ச் மாதத்தில் முறையே 120 புள்ளிகள் மற்றும் 145.2 புள்ளிகளாக சாதனை அளவை எட்டி உள்ளன. இது ஒருபுறமிருக்க கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளதால், விவசாயம் உள்ளிட்ட ஒட்டுமொத்த உற்பத்தி பொருட்களின் விநியோக செலவு அதிகரித்துள்ளது. இது, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் சில நாடுகளில் உணவுப் பற்றாக்குறைக்கும் வழிவகுத்துள்ளன. ஆப்ரிக்க நாடுகளில் ஏற்கனவே பசி, பஞ்சம் உள்ள நாடுகள், உக்ரைன் மூலம் மானிய விலையில் கிடைக்கும் கோதுமை மற்றும் பிற தானியங்களை நம்பி உள்ளன. தற்போது அவற்றின் விநியோகம் நின்று போனதால் அங்கு மக்கள் அடிப்படை உணவு கிடைக்காமல் அரசியல் ஸ்திரமற்ற நிலையும் உருவாகி உள்ளது.ஐரோப்பிய நாடுகளின் 39 சதவீத மின்சார தேவையை ரஷ்யாதான் பூர்த்தி செய்கிறது. ஐரோப்பிய நாடுகளின் முக்கிய எரிவாயு சப்ளை நாடாகவும் ரஷ்யா திகழ்கிறது. இவை இரண்டுக்குமே ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளதால் தற்போது அங்கு மின்சாரம், எரிவாயு விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த ஒட்டுமொத்த விநியோக சங்கிலியையும் சரி செய்ய, உணவு பற்றாக்குறை இடைவெளியை நிரப்ப அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும், முழு வெற்றி காண பல ஆண்டுகள் ஆகும் என சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனங்கள் கணித்துள்ளன. இதனால் ரஷ்யா – உக்ரைன் போர் முடிவுக்கு வரும் வரையிலும், நிலைமை சீராகும் வரையிலும் உலக அளவில் இந்த விலை உயர்வுகள் தவிர்க்க முடியாதவையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.* சர்வதேச பொருளாதாரம் 35% வீழ்ச்சியை சந்திக்கும்உக்ரைன் போர் காரணமாக சர்வதேச பொருளாதாரம் பாதித்து, உணவு பஞ்சம் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக சர்வதேச நிதியம் எச்சரித்துள்ளது. விலைவாசி உயர, உயர மக்கள் வாங்கும் வருமானம் போதுமானது இல்லை என்ற நிலையை ஏற்படுத்தும். ஆசியா, ஐரோப்பா நாடுகளில் கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். சர்வதேச சந்தையில் நம்பிக்கையற்ற தன்மையை ஏற்படுத்தும். இதன் காரணமாக சர்வதேச பொருளாதார வளர்ச்சி 4.4 சதவீதம் குறையும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது முந்தைய ஆண்டை விட 25 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை வீழ்ச்சியை சந்திக்கும். சர்வதேச பொருளாதாரத்தை இந்த போர் அடியோடு மாற்ற போகிறது. சர்வதேச உலக விநியோக சங்கிலியை இந்த போர் மாற்றும். இதிலிருந்து மீள பல நாட்களாகும் என்று ஐஎம்எப் எச்சரித்துள்ளது.* ஆளானப்பட்ட அமெரிக்காவும் தப்பவில்லைஉக்ரைன் போர் பாதிப்பால், ஆளானப்பட்ட அமெரிக்கா கூட தப்பவில்லை. அங்கு 40 ஆண்டுகளுக்குப் பிறகு உணவுப் பொருட்கள் விலை முதல் முறையாக உயர்ந்துள்ளது, அமெரிக்கர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 1982க்கு பிறகு பெட்ரோல், உணவு, வீட்டு வாடகை, மின்சாரம் என பலவற்றின் விலைவாசி ஏற்றம் கண்டுள்ளது. இந்தியாவைப் போலவே அமெரிக்காவிலும் தினசரி பெட்ரோல் விலை உயர்வு வாடிக்கையாகி உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு வாடகை 0.5% உயர்ந்துள்ளது. மின்சார கட்டணங்கள் 4.2% அதிகரித்துள்ளது. உணவு விலை 0.9% அதிகரித்துள்ளது. வீட்டு உபயோகப் பொருட்களின் விலைவாசி 1.6% உயர்ந்தது. கார்களின் விலை சிப்கள் பற்றாக்குறையால் 12.2% விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அரசுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட வட்டி விகிதம் அதிகரித்து மக்கள் தலையில் அதிக சுமை ஏற்பட்டுள்ளது. இதே சூட்சமத்தைதான் பெரும்பாலான உலக நாடுகளும் செய்து வருகின்றன….

Related posts

2ம் கட்டமாக நடந்த ஈரான் அதிபர் தேர்தல் பெசஸ்கியான் வெற்றி: ஒரு மாதத்திற்குள் பதவியேற்பு

இங்கிலாந்து புதிய பிரதமர் கியர் ஸ்டார்மருடன் பிரதமர் மோடி பேச்சு: தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய உறுதி

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி