அடுத்த அதிர்ச்சி

பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து ஒன்றிய அரசு, மக்களுக்கு அளிக்கும் அடுத்த அதிர்ச்சி வைத்தியம் சுங்கச்சாவடி கட்டண உயர்வு. நாளை முதல் நாடு முழுவதும் அமலாக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 6,606 கிமீ தூரம் வரை தேசிய நெடுஞ்சாலைகளாக உள்ளன. 49 இடங்களில் சுங்கச்சாவடிகளை அமைத்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நாளை முதல் அமலுக்கு வர உள்ள சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு வலுத்துள்ளது.தமிழகத்தில் சென்னை வானகரம், சூரப்பட்டு உட்பட 60 கிமீ தூரத்திற்குள் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டுமென தமிழக அரசு சார்பில் ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை விடப்பட்டது. இதுதொடர்பாக அமைச்சர் நிதின் கட்கரியும் 60 கிமீ தூரத்திற்குள் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படுமென நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்த மகிழ்ச்சி கொஞ்ச நாட்கள் கூட நீடிக்கவில்லை. அடுத்த ஒன்றிய அரசின் அறிவிப்பே சுங்கச்சாவடிகள் கட்டண உயர்வு தான். இதில், அகற்றக்கோரிய சென்னை வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளின் கட்டணமும் ₹10 முதல் ₹40 வரை உயர்த்தப்பட்டிருக்கிறது.தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதி 2008ன் படி மாநகராட்சி, நகராட்சி எல்லையில் இருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் சுங்கச்சாவடிகள் இருக்கக்கூடாது. ஆனால், விதிகளை மீறி பல சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. சென்னை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில், புறநகரில் வசிக்கும் மக்கள் குறைந்த தொலைவில் சுங்கச்சாவடியை கடந்து செல்லும்போது, கட்டாயம் கட்டணம் செலுத்த வேண்டுமென நிர்பந்திக்கப்படுகின்றனர். குறிப்பாக, வெளிமாநில, வெளியூர் வாகன பதிவெண் கொண்டவர்களின் நிலைமை படுமோசம். இதனால் சுங்கச்சாவடி ஊழியர்களோடு மோதல் சம்பவம் நடப்பது தொடர்கதையாக உள்ளது. தூரத்தின் அடிப்படையில் கட்டணம் என்பதை விட, கடந்து சென்றாலே கட்டண வசூலிப்பில் ஈடுபடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, ஒன்றிய அரசு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி கடந்த மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் தொழிற்சங்கங்கள் சார்பில்  வேலைநிறுத்தம் நடந்தது குறிப்பிடத்தக்கது.நாளை முதல் 800 அத்தியாவசிய மருந்துகளின் கட்டணம் 10.7 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. தற்போதைய நிலவரப்படி பெட்ரோல் விலை ₹106ஐ தாண்டி உள்ளது. டீசல் விலையும் ₹100ஐ நெருங்கி வருகிறது. இந்த விலை உயர்வு கட்டுப்படியாகாததால் நாடு முழுவதும் சுமார் 20 சதவீத லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் இயக்கப்படவில்லை என்ற தகவல்கள் அதிர்ச்சியை தந்துள்ளது. இந்த சூழலில் கனரக வாகனங்களுக்கான சுங்கச்சாவடி கட்டண உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயரும். ஆம்னி பஸ் கட்டணம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.கொரோனா பரவல் குறைந்து மக்கள் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பி உள்ள நிலையில், அடுத்தடுத்து விலை உயர்வு அறிவிப்பால் மக்கள் ஒன்றிய அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்….

Related posts

தடை விலகியது

தங்க அம்பாரி

போர் உச்சக்கட்டம்