அடுத்தகட்ட நடவடிக்கை இல்லாமல் அமைதியாகிப் போன சின்ன மம்மி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘திமுக அரசு பொறுப்பேற்ற பின், கொரோனா தடுப்பு பணிகள் வேகமாக நடைபெற்றன. அது மட்டுமில்லாமல் இந்த பணியில் ஈடுபட்டுள்ளவர்களை முன் கள பணியாளர்களாக அறிவித்து அவர்களுக்கு சிறப்பு உதவி தொகையையும் முதல்வர் அறிவித்தார். அதன்படி சுகாதார துறையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்களும் முன் கள பணியாளர்களாக்கப்பட்டனர். அதன்படி குமரி மாவட்டத்தில் 9 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட டாக்டர்கள், செவிலியர்கள், அலுவலர்களுக்கு வழங்க ₹1 கோடியே 23 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி சென்னையில் உள்ள பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் மூலம், குமரி மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டது. அதன்படி அந்தந்த ஆரம்ப சுகாதார நிலைய கண்காணிப்பாளர்கள் பட்டியல் தயாரித்து, சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைத்தனர்.  அதன்படி 9 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட படி ₹30 ஆயிரம், ₹20 ஆயிரம், ₹15 ஆயிரம் என வழங்கப்பட்டது. ஆனால் இன்னும் அகஸ்தீஸ்வரம், முட்டம், ஆறுதேசம் ஆகிய வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட செவிலியர்கள் , டாக்டர்கள் பெயரை சேர்க்கவில்லையாம். இதில் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகி உள்ளனர். பலமுறை சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு ெகாள்ள, உங்கள் சுகாதார நிலையத்தில் இருந்து பட்டியல் இன்னும் வரவில்லை. யார், யாருக்கு வழங்க வேண்டும் என்ற பட்டியல் வந்தால் தான் எங்களால் வழங்க முடியும் என கூறி விட்டனர். கொரோனா காலத்தில் தங்களை பற்றி கூட கவலைப்படாமல் பணியாற்றி மக்கள் சேவையாற்றியவர்களுக்கு முதல்வர் உத்தரவிட்ட பிறகும், முன் கள பணியாளர்களுக்கான அந்த தொகையை வழங்காமல் காலம் கடத்துவது ஏன் என்ற சுகாதார பணியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கண்ணீர்விட்ட தொண்டரிடம் விழிபிதுங்கினாராமே மாங்கனி மாஜி..’’ ‘‘ஆமா…மாங்கனி  சிட்டி ரத்தத்தின் ரத்தமான தொண்டனின் கண்ணீருக்கு ஆன்சர் சொல்ல முடியாம  மாஜி விவிஐபி திணறிட்டார். சமீபத்துல பகுதி செயலாளர் ஒருவரின் பதவிய மாஜி  விவிஐபி பறிச்சுட்டாராம். யாரையும் மிரட்டி காசு பார்க்கத் தெரியாத அந்த  செயலாளரு, 10 ஆண்டு கட்சி ஆட்சியில இருந்தும் கடனில் தத்தளிக்கிறாராம்.  கொத்தனார் வேலைக்கு செல்லும் அவருடைய பதவியத்தான் பறிச்சிருக்காங்களாம்.  இதனால அவரது பகுதி தொண்டர்கள் கடும் ஷாக்காயிட்டாங்களாம். மாஜிகிட்ட பேசும்  செல்வாக்குள்ள அந்த மாஜி பகுதி, நேருக்கு நேரா போய் கேள்வி  கேட்டிருக்காரு. மாஜி சிவந்தமலை கோலோச்சிய நேரத்துல உங்களுக்கு  ஆதரவாத்தானே நான் இருந்தேன். இன்னும் அப்படித்தானே இருக்கேன். என்னிடம்  என்ன குறையக் கண்டீங்க என்று  நக்கீரர் போல நெற்றிக்கண்ணை திறந்து  கண்ணீருடன் நியாயம் கேட்டிருக்காரு. இதனை சற்றும் எதிர்பாராத மாஜி விவிஐபி  திணறிப் போயிட்டாராம். அருகில் நின்ற மாவட்டத்தை மாஜி பார்க்க, அவராலும்  பதில் சொல்ல முடியவில்லையாம். ரெண்டுபேரும் கொஞ்ச நேரம் அப்படியே  நின்னுக்கிட்டு இருந்தாங்களாம். அதன்பிறகு சுதாரித்துக் கொண்ட மாஜி,  ரத்தத்தின்ரத்தத்தை சமாதானம் செஞ்சி அனுப்பிவச்சாராம்’’ என்றார்  விக்கியானந்தா. ‘‘சின்ன மம்மி எப்படி இருக்கார்..’ ‘‘சிறையில்  இருந்து வெளியே வந்ததும், இலை கட்சியை கைப்பற்றி விடலாம் என சின்ன மம்மி  நினைத்தாராம்… ஆனால், அது எடுபடவில்லை… இலை கட்சியின் நிர்வாகிகளிடம்  ஆடியோ அரசியல் செய்தார். அதுவும் பலிக்கவில்லை… இதைத் தொடர்ந்து, தென்  மாவட்டங்களில் சின்ன மம்மி சுற்றுப்பயணம் மேற்கொள்ள போவதாக தகவல்கள்  வெளியானது. இதற்காக நெற்களஞ்சியம் மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக  சின்ன மம்மி தங்கி இருந்தாராம்.. இலை கட்சியின் முக்கிய தலைவர்கள் தன்னை  சந்திக்க வருவார்கள் என நினைத்தார். ஆனால்… நிர்வாகிகள் கூட சந்திக்க  வராததால் கடும் விரக்திக்குள்ளாகி யாரிடமும் சொல்லாமல் சின்ன மம்மி  தலைநகருக்கு சென்றார். இந்த நேரத்தில் சேலத்துக்காரருடன், தேனிக்காரர்  திடீர் சமரசம் ஆனார்… இதனால் சின்ன மம்மி அதிர்ச்சி அடைந்தாராம்… ஆடியோ  அரசியல்… சுற்றுப்பயணம்…. அடுத்த கட்ட மூவ்… என்ன என்பது குறித்து  சத்தம் காட்டாமல் சைலன்டில் சின்ன மம்மி இருந்து வருகிறார்… இதனால்  சேலத்துக்காரரின் டீம் தற்காலிகமாக குஷியாக உள்ளதாம்’’ என்றார்  விக்கியானந்தா. ‘‘பயிர் சேதமடைந்த கிராமங்களுக்கு வேளாண் அதிகாரிகள் போகலைனு புகார் வருதே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம்  மாவட்டத்துல, செய் ஆறு தொகுதியில செய் ஆறு, அனகா ஊரு, பாக்கம்னு முடியுற  ஊருன்னு மொத்தமாக 3 வட்டாரங்கள் இருக்குது. தஞ்சைக்கு அடுத்தபடியாக நெல்  உற்பத்தியில, ஸ்டேட் லெவல்ல 2வது இடத்துல கிரிவலம் மாவட்டம் தான்  இருக்குது. இந்நிலையில, சென்னைக்கு அடுத்தபடியாக கிரிவல மாவட்டம் செய் ஆறு  நகர்ல வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்தது, இதனால அனைத்து ஏரிகளும் நிரம்பி  வழிஞ்சது. இதனால வெள்ளப் பெருக்கம் ஏற்பட்டு, பல ஏக்கர் நெல் பயிருங்க மழை  வெள்ளத்துல மூழ்கி சேதமடைஞ்சது. பயிர் சேதமடைஞ்ச கிராமங்களுக்கு அக்ரி  ஆபிசர்ஸ் யாரும் எட்டிக்கூட பார்க்கலையாம்.  மூன்று வட்டாரங்கள்ல இருக்குற  அக்ரி அலுவலகத்துக்கு, நேர்ல சென்றாவது குறைகளை முறையிடலாம்னு பார்த்தா  அதிகாரிகள் அலுவலகத்துலயே இருப்பதில்லையாம். அலுவலகத்துல இருக்குறவங்கள  கேட்டா ஆபிசருங்க கேம்ப்புக்கு போயிருக்குறதாக சொல்றாங்களாம். தொடர் மழை  வெள்ளத்துல அக்ரி ஆபிசருங்களே காணாம போய்ட்டாங்களானு தெரியலையேன்னு பேச்சு  அடிபடுதாம்..’’ என்று சிரித்தார் விக்கியானந்தா. …

Related posts

கூட்டத்தை கூட்ட முடியாமல் தவிக்கும் மாஜி மந்திரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

ஆண்கள் ஜெயிலுக்கு கண்காணிப்பாளராக மாற்ற வேண்டும் என போர்க்கொடி தூக்கும் லேடி ஆபீசர்ஸ் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

குக்கர் தலைவரின் மெகா பிளானுக்கு தடை போடும் நடவடிக்கையில் இறங்கியுள்ள பலாப்பழக்காரரை பற்றி சொல்கிறார் wiki யானந்தா