அடிக்கடி விபத்துகள் நிகழும் வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் பகுதியில் சர்வீஸ் சாலை முறையாக அமைக்கப்படுமா?

நெல்லை, மே 7: நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையையொட்டி முறையான சர்வீஸ் சாலை அமைக்கப்படாததால் அடிக்கடி விபத்து நிகழ்வதால் இதைத் தடுக்க இப்பகுதியில் சர்வீஸ் சாலை முறையாக அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது. வற்றாத ஜீவநதியாம் தன்பொருநை எனப்படும் தாமிரபரணி பாய்ந்து வளம் கொழிக்கும் நெல்லை சீமையின் இதயப்பகுதியாக வண்ணார்பேட்டை திகழ்கிறது. இதில் இடம்பெற்றுள்ள வடக்கு, தெற்கு பைபாஸ் சாலைகள் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், முறையான சாலை விதிகள் எங்குமே பின்பற்றப்படாதது வருத்தமான விஷயம்.

நெல்லை வடக்கு பைபாஸ் பாலம் முடிவில் இருந்து வண்ணார்பேட்டை ஊருக்குள் செல்லும் சாலை வரை போதுமான அளவுக்கு முறையாக சர்வீஸ் சாலைகள் அமைக்கப்படவில்லை. இதனால் தினமும் விபத்து பயத்திலேயே மக்கள் பயணிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக அரசு சேவை மையம் அருகில் மெகா பள்ளம், அதை அடுத்து ஒரு பள்ளம், அதை தொடர்ந்து வண்ணார்பேட்டை ஊருக்குள் செல்லும் வளைவில் ஒரு பள்ளம் என பள்ளங்களால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் புறநகர் பஸ் நிறுத்தம் முதல் ஆங்காங்கே மழை நீர் தேங்கியும், தொடர் பள்ளங்களும் ஆங்காங்கே உள்ளன. இதை சீரமைப்பது மாநகராட்சியா, நெடுஞ்சாலைத்துறையா? என கேள்விக்குறியாக உள்ளது.

மதுரை மற்றும் உள்ளூர் பஸ் ஏற காத்திருப்போரின் நிலை மிகவும் வருத்தமாக உள்ளது. சகதிக்குள்ளும், பள்ளத்திற்குள்ளும், மழை நீர் தேங்கிய கொசுக்களுக்கும் இடையில் காத்திருந்து பஸ் ஏற நிற்கும் அவலம், பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. வடக்கு பைபாஸ் சாலை சர்வீஸ் ரோட்டில் தேங்கிய மழை நீர் பள்ளத்தில் சிக்கி நேற்றும் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். இதே போல் கடந்த வாரமும் ஆட்டோ டிரைவர் ஒருவர் விபத்து பகுதியான வடக்கு பைபாஸ் சாலை அரசு சேவை மையம் அருகில் விபத்தில் இறந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையையொட்டி முறையான சர்வீஸ் சாலை அமைக்கப்படாததால் விதிமுறைகளை மீறும் வாகனங்களால் விபத்து அபாயம் நிலவுகிறது.

அத்துடன் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்த பஸ் நிறுத்தம் பகுதியை புறக்கணிக்கும் பஸ்கள், செல்லப்பாண்டியன் மேம்பாலம் இறங்கும் இடத்திலேயே நின்று பயணிகளை ஏற்றி இறக்கிச்செல்வதால் அங்குள்ள பயணியர் நிழற்குடையும் தற்போது காட்சிப் பொருளாக மாறி வருகிறது. எனவே, இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் தனிக்கவனம் செலுத்தி இதற்கு நிரந்தரத்தீர்வு காண தக்க நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். குறிப்பாக இப்பகுதியில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்றி பள்ளங்களை சீரமைப்பதோடு சர்வீஸ் சாலையை விரிவுபடுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்