அஞ்சுகிராமம் அருகே துணிகரம் பேராசிரியர் வீட்டில் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை

 

அஞ்சுகிராமம், பிப்.2: குமரி மாவட்டம் அழகப்பபுரத்தை சேர்ந்தவர் ஞானப்பொன் மனைவி ராஜசெல்வம் (35). இவர் கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ஞானப்பொன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். ராஜசெல்வம் கல்லூரிக்கு செல்ல வசதியாக அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள இவரது தந்தை வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வருகிறார். வாரம் இரு முறை வீட்டிற்கு வந்து பார்த்து விட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்து விட்டு இரவு தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு கதவும் உடைக்கப்பட்டு கிடந்தது. அதிர்ச்சி அடைந்தவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் உள்ளிருந்த பீரோவை உடைத்து ஒரு பவுன் கம்மல் மற்றும் ஒன்றரை பவுன் தங்க மோதிரம் என இரண்டரை பவுன் நகை மற்றும் ரொக்கம் 5000, 3000 மதிப்புள்ள ஸ்பீக்கர், 2000 மதிப்புள்ள டார்ச் லைட் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது. இவற்றின் மொத்த மதிப்பு 85 ஆயிரம் ஆகும்.

இது குறித்து இராஜசெல்வம் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனிப்படை போலீசார் அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது பழைய குற்றவாளிகளா? அல்லது புதியவர்களா? வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்