அஞ்சல்துறை ஊழியர்கள் பட்டுக்கோட்டையில் தேசியக்கொடியுடன் ஊர்வலம்

 

பட்டுக்கோட்டை, ஆக. 9: நாடு சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு 76 ஆவது ஆண்டு சுதந்திர தினம் வரும் 15ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. வரும் 13ம்தேதி முதல் 15ம்தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் பொதுமக்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் (இல்லம்தோறும் மூவர்ணக்கொடி) என்று கூறியதை தொடர்ந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் கோட்ட அஞ்சல்துறை சார்பில் அஞ்சல்துறை ஊழியர்கள் தங்களது கைகளில் தேசிய கொடிகளை ஏந்தி நேற்று ஊர்வலம் நடத்தினர்.

ஊர்வலத்திற்கு பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சல்துறை கண்காணிப்பாளர் ரகுராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கொடி ஊர்வலம் தலைமை தபால் நிலையத்திலிருந்து புறப்பட்டு பெரியதெரு, மணிக்கூண்டு, தலையாரிதெரு, தேரடித்தெரு, மண்டகப்படிமுக்கம், பெரியகடைத்தெரு வழியாக மீண்டும் தலைமை தபால் நிலையத்தை அடைந்தது. ஊர்வலத்திற்கு முன்பாக சுதந்திரத்தை போற்றும் வகையில் ஒரு இரு சக்கர வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் பாடல் ஒளிபரப்பப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சல்துறை கண்காணிப்பாளர் ரகுராமகிருஷ்ணன் பேசுகையில், 76வது சுதந்திர தினத்தை 3 நாட்கள் பொதுமக்கள் அவரவர் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் தேசிய கொடிகள் பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சல்துறைக்குட்பட்ட பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி 2 தலைமை அஞ்சலகங்கள், 39 துணை அஞ்சலகங்கள், 238 கிளை அஞ்சலகங்கள் ஆக மொத்தம் 279 அஞ்சலகங்களிலும் விற்பனைக்கு உள்ளது. ஒரு கொடியின் விலை ரூபாய் 25. அனைவரும் சுதந்திரத்தை போற்றுவோம், கொண்டாடுவோம் என்றார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை