அசுர பலத்தில் அரசு பள்ளிகள்

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த பெரும்பாலானோர், தற்போது தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இதனால் நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2020-21ம் கல்வியாண்டில் சுமார் 1 லட்சம் மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். நடப்பு கல்வியாண்டில் (2021-2022) சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நடப்பாண்டில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதியதாக சேர்ந்துள்ளனர். இவர்களில் சுமார் 12 ஆயிரம் பேர் தனியார் பள்ளியில் இருந்து கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல், மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப, நடுநிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. சுமார் 150-200க்குள் இருந்த மாணவர் சேர்க்கை, தற்போது 500ஐ கடந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பை அதிமுக அரசு மேம்படுத்தவில்லை. பல பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் மூடப்படும் நிலை உருவானது. மேலும், பெரும் நிதிச்சுமையையும் புதிய அரசின் மீது சுமத்தி விட்டு சென்றுள்ளது. மாணவர் சேர்க்கை அதிகரிப்பால், அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டிடங்கள் தேவைப்படும். இலவச சீருடை, பாடப்புத்தகங்கள், சத்துணவு மற்றும் அடிப்படை தேவைகள் என செலவினங்களும் அதிகரிக்கும்.
தமிழகத்தை பொறுத்தவரை புதிதாக  பொறுப்பேற்றுள்ள திமுக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பொதுமக்கள்,  நீதிமன்றம் மற்றும் பிற மாநில அரசுகளின் பாராட்டை பெற்று வருகின்றன. பெருகி  வந்த கொரோனா தொற்றை கடுமையாக குறைத்தது, ஊரடங்கு தளர்வுகளை பிரித்து அறிவித்தது, நிவாரண நிதி ₹4 ஆயிரம், தரமான மளிகை  பொருட்கள் வழங்கியது, அரசு நகர பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்  அறிவிப்பு, ஆவின் பால் விலை குறைப்பு என அடுத்தடுத்து, மக்களின் நலன்  சார்ந்து எடுத்து வரும் நடவடிக்கைகள் வரவேற்பிற்குரியதாகவும், வாழ்வாதாரம்  இழந்த துயரில் தவித்த மக்களுக்கு பெரும் ஆறுதலாகவும் அமைந்துள்ளது.பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாவட்டம்தோறும் சென்று, அரசுப்பள்ளிகளின் நிலையை ஆய்வு செய்து குறைகளை கேட்டு வருகிறார். அரசுப்பள்ளியை முன்மாதிரியான பள்ளியாக மாற்றுவதற்கான முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் அரசோடு மக்களும் இணைந்து கைகொடுத்து, அரசுப்பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் இணைந்து, நிதியாதாரத்தை பெருக்கி அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். அரசுப்பள்ளிகள் மீண்டும் அசுர பலம் பெற்று மீண்டு வரும் நிலையில், ஆசிரியர்களும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி இழந்த பெருமையை மீட்டெடுக்க வேண்டும்.

Related posts

அனல்பறந்த விவாதம்

முதல் எப்ஐஆர்

வெற்றிக்கோப்பை