அங்காளன் எம்எல்ஏவுக்கு டெங்கு: பிறந்தநாள் விழாவின்போது மயங்கி விழுந்தார்

 

திருபுவனை, பிப். 5: புதுச்சேரி மாநிலம் திருபுவனை தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அங்காளன் எம்எல்ஏ. இவர் தற்போது பாஜ ஆதரவு எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இவரது வீடு செல்லிப்பட்டு கிராமத்தில் உள்ளது. கடந்த 2 நாட்களாக அங்காளன் எம்எல்ஏ காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதே நேரத்தில் ஓய்வின்றி வேலை செய்து வந்தார். இந்நிலையில், அங்காளன் எம்எல்ஏ தனது பிறந்தநாளையொட்டி நேற்று காலை 8 மணியளவில் வீட்டில் ஆதரவாளர்கள் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.

அப்போது, திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். பிறகு அவரின் ரத்த மாதிரியை எடுத்து சோதனை செய்தபோது அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து எம்எல்ஏவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்த சபாநாயகர் செல்வம் மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்காளன் எம்எல்ஏ உடல் நலம் குறித்து விசாரித்தார்‌. மேலும், மருத்துவர்களிடம் எம்எல்ஏவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும், அவருடைய உடல் நலம் குறித்தும் கேட்டறிந்ததோடு சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி