அக்னி வசந்த விழாவில் அர்சுனன் தபசு நாடகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

 

பெரணமல்லூர், மே 29: பெரணமல்லூர் அருகே திரவுபதி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் அக்னி வசந்த விழாவில் நேற்று நடைபெற்ற அர்சுனன் தபசு நாடக நிகழ்ச்சியினை திரளான பக்தர்கள் கண்டு களித்தனர். பெரணமல்லூர் அடுத்த கடுகனூர் பகுதியில் அமைந்த திரவுபதி அம்மன் கோயிலில் கடந்த 13ம் தேதி முதல் கொடியேற்றி, அலகு நிறுத்தி அக்னி வசந்தவிழா தொடங்கியது. இதனை தொடர்ந்து விழாவில், நாள்தோறும் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. மேலும் கடந்த 25ம் தேதி முதல் வில்வளைப்பு, சுபத்திரை திருமணம், ராஜசூய யாகம், பகடை, துகில் உள்ளிட்ட கட்டைகூத்து நாடகங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று அர்சுனன் தபசு மரம் ஏறுதல் நாடகம் நடந்தது. இதனையொட்டி காலை 9மணிக்கு அர்சுனன் வேடமணிந்த நாடக கலைஞர் நாடக திடலில் நிறுத்தப்பட்டிருந்த தபசு மரத்தில் பாட்டு பாடியபடி மேலே ஏறினார். மேலும் குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமணதடை நீங்கவும் கீழே இருந்த பெண் பக்தர்களுக்கு எலுமிச்சை பழம் கொடுத்து ஆசி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றிய குழு தலைவர் ராஜி, ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசன், ஞானவேல் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். படவிளக்கம். பெரணமல்லூர் அடுத்த கடுகனூர் கிராமத்தில் நடைபெற்று வரும் அக்னி வசந்த விழாவில் நேற்று அர்சுனன் தபசு நாடகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்