அக்னி நட்சத்திரம் தொடங்கியது; சிவன் கோயில்களில் தாராபிஷேகம் தொடர்ந்து 25 நாட்கள் வரை நீடிக்கும்

வேலூர், மே 5: தமிழகத்தில் நேற்று தொடங்கிய ‘அக்னி நட்சத்திரம்’ 25 நாட்கள் வரை நீடிக்கும். ஆனால் வெயில் கொளுத்துமா, அல்லது அடிக்கடி மழை பெய்தது வெப்பத்தை தணிக்குமா என்பது பொதுமக்களிடையே கேள்விக்குறியாக உள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை நீடிக்கும். இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். குறிப்பாக அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு வெயின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும். இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது.

வேலூரில் கடந்த ஏப்ரல் 20ம்தேதி அதிகபட்சமாக 104.7 டிகிரி வரை வெயில் பதிவானது. அதைதொடர்ந்து கோடை மழையின் காரணமாக வெயில் சற்று தணிந்தது. பின்னர் 100 டிகிரிக்கு குறைவாகவே வெயில் பதிவாகி வருகிறது. நேற்று கனமழை காரணமாக 96.8 டிகிரியாக வெயில் பதிவானது. இதேபோல் சென்னை, மதுரை, திருச்சி, கரூர், திருத்தணி ஆகிய நகரங்களில் வெப்பம் குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியது. தொடர்ந்து 25 நாட்கள் அதாவது வரும் 29ம்தேதியுடன் நீடிக்கிறது. வழக்கமாக இந்த காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும். எனவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் தேவையின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறையினரும் அறிவுறுத்தி வருகின்றன.

அக்னி வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள பகல் நேரங்களில் பருத்தி ஆடைகளை உடுத்துவதுடன், நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ள வேண்டும். 25 நாட்கள் தொடரும் வெயிலில் முடிந்தவரை வெளியில் செல்வதை தவிர்த்தால் உடலில் நீர்வற்றிப்போகும் அபாயத்தை தவிர்க்கலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் இந்தாண்டு புயல் உருவாகும் என்றும் அதனால் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வெயில் கொளுத்துமா? மழை பெய்து வெயிலின் தாக்கத்தை குறைக்குமா என்பது ெபாதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்கியதையடுத்து வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள சிவன் கோயில்களில் நேற்று தாராபிஷேகம் நடந்தது. வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் தாராபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்