அக்டோபர் முதல் வியாழக்கிழமைகளில் பள்ளிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: வரும் அக்டோபர் முதல் வியாழக்கிழமைகளில் பள்ளிகளில் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பொது சுகாதாரத் துறை சார்பில் நேற்று 37வது கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சென்னை தி.நகர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்த கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி:இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தொடர்ந்து தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இதுவரை 5.38 கோடி பேருக்கு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், 96.50% பேர் முதல் தவணையும், 91.10% பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். அதேபோல, முன்னெச்சரிக்கை தடுப்பூசி 4.25 கோடி பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், 80,705 பேர் மட்டுமே செலுத்தியுள்ளனர். பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்வது அவசியமானது.அக்டோபர் முதல் தடுப்பூசி செலுத்துவதில் சிறிய மாற்றம் செய்யப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ நிர்வாகங்களிலும், குறிப்பாக, 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,713 துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள், சென்னையை பொறுத்தவரை 159 நகர்புற சுகாதார நிலையங்கள், 292 வட்டார மருத்துவமனைகளிலும், 36 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் என மொத்தமாக 11,333 என்று அரசின் மருத்துவமனை கட்டமைப்பு உள்ளது.இந்த 111,33 இடங்களிலும் அக்டோபரில் தொடங்கி, இனி எல்லா வாரங்களிலும் தமிழகத்தில் போட வேண்டிய தடுப்பூசிகள் குறிப்பாக பிறந்த குழந்தை தொடங்கி, பாலூட்டும் தாய்மார்கள் வரை என 13 வகையான தடுப்பூசிகள் போடப்படும். இந்த தடுப்பூசிகளை வாரந்தோறும் புதன்கிழமைகளில் தொடர்ச்சியாக போட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இனி மேல் தமிழக அரசின் சார்பில் அனைத்து மருத்துவமனை கட்டமைப்புகளிலும் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் கருவுற்ற தாயில் இருந்து, பிறந்த குழந்தை ெதாடங்கி 16 வயது இளைஞர் வரை இந்த தடுப்பூசி போடப்படும். அதே நேரத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பள்ளிகள் தோறும் சென்று தடுப்பூசி போடப்படும். அக்டோபர் முதல் வாரம் தொடங்கி புதன்கிழமைகளில் கொரோனா உள்ளிட்ட 13 தடுப்பூசிகளும், வியாழக்கிழமைகளில் பள்ளிகள் அமைந்த இடத்தில் எவ்வளவு சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று கணக்கு எடுத்து அந்த பள்ளிகளில் தடுப்பூசி போடப்படும்.பள்ளிகள் விடுமுறை விடுவதற்கான தேவை இல்லை. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு பாதிப்பு கண்டறிந்தவுடன் அவர்களை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்த்து கொள்ளலாம். 3, 4 நாட்கள் குணமான பிறகு பள்ளிக்கு அனுப்பலாம். அதை தவிர்த்து ஒட்டுமொத்தமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை. முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதற்கான அவசியம் இல்லை. ஒட்டு மொத்த பாதிப்பு பெரியவர்களுக்கு, சிறியவர்களுக்கு, குழந்தைகளுக்கு எல்லாருக்கும் சேர்த்து 1044. இந்த 1044 என்பது கடந்த காலங்களில் இந்த மாதத்தில் எப்போதும் எவ்வளவு இருக்குமோ அவ்வளவு தான். எச்1, என் 1 காய்ச்சல் என்பது தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கக்கூடியது. எனவே, தலைவர்கள் அறிக்கைகள், பேட்டிகள் மூலம் பதற்றம் அடைய செய்ய வேண்டாம். பள்ளி ஆசிரியர்கள் அவரவர் வகுப்புகளில் யாருக்காவது நோயின் தன்மை அறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பெற்றோர்களுக்கு அறிவிக்க வேண்டும். அதையும் கடந்து வருகிற வாரங்களில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் தடுப்பூசி போடுவதற்காக பள்ளிகளுக்கு மருத்துவ குழுவினர் செல்ல உள்ளார்கள். அப்போது தீவிரமாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். பள்ளிகளில் விடுப்பு எடுக்கும் அனைவரும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சொல்ல முடியாது. ஊருக்கு போய் இருக்கலாம். பல்வேறு விஷயங்கள் இருக்கிறது. இருந்தாலும் மாணவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.* 37வது முகாம் வரை 5.38 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது.* முன்னெச்சரிக்கை தடுப்பூசி போட்டவர்கள் 80,705 பேர்.* 11,333 மருத்துவ மையங்களில் வியாழக்கிழமைகளில் கொரோனா தடுப்பூசி* தமிழகத்தில் எச்1 என்1 பாதித்தோர் 1044 பேர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை