அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுவின் பெயரில் தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட பட்டதாரிகளிடம் ரூ.1.5 கோடி மோசடி

* திருப்பத்தூரில் போலி நேர்முகத்தேர்வு நடத்திய 8 பேர் கைது* 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவுசென்னை: அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுவின் பெயரில், போலி நேர்முகத்தேர்வு நடத்தி தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்டோரிடம் ரூ.1.5 கோடிக்கு மேல் பணம்  பெற்று போலி பணி நியமன ஆணைகள் வழங்கி மோசடி செய்து 8 பேர் கொண்ட கும்பலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவின் தென் மண்டல அலுவலர் ஆர்.சுந்தரேசன் புகார் ஒன்று அளித்தார். அதில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவின் பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்தி மதுரை, கோவை, காஞ்சிபுரம் மற்றும் சேலம் போன்ற இடங்களில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்துள்ளனர். அப்படி தேர்வானவர்கள் எங்கள் நிறுவன லெட்டர் பேடில் பணி ஆணை, சான்றுகளுடன் வருகின்றனர். எனவே இந்த மோசடியில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சூர்யா, அருண்குமார், தர்மலிங்கம், தயாநிதி, ரமேஷ், சக்கரவர்த்தி, பிரபு மற்றும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த யோகானந்தன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்குழு அதிகாரிகள் என்று கூறி போலியாக நேர்முகத்தேர்வு நடத்தி 100க்கும் மேற்பட்ட பட்டதாரி மற்றும் இன்ஜினியர்களிடம் ரூ.1.5 கோடி வரை பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. நேர்முக தேர்வில் வெற்றி பெற்றதாக பணம் பெற்ற நபர்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுவின் பெயரில் உள்ள லெட்டர் பேடில் போலியான பணி நியமன ஆணைகளை வழங்கி மோசடி செய்தது உறுதியானது. மேலும், கடந்த 26ம் தேதி திருப்பத்தூரில் போலியாக நேர்முக தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்ததும் தெரியவந்தது. உடனே மத்திய குற்றப்பிரிவு போலீசார் சாதாரண உடையில் போலி நேர்முகத்தேர்வு நடந்த திருப்பத்தூர் பகுதிக்கு சென்று மோசடி கும்பலை கையும் களவுமாக சுற்றி வளைத்து பிடித்தனர். இந்த மோசடியில் ஈடுபட்ட சூர்யா(32), அருண்குமார்(28), தர்மலிங்கம்(38), தயாநிதி(35), ராஜேஷ்(25), சக்கரவர்த்தி(36), பிரபு(32), யோகானந்தம்(31) ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 8 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்த மோசடி தமிழகம் முழுவதும் நடந்துள்ளதால் கைது செய்யப்பட்ட 8 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்திய பிறகு தான் தமிழகம் முழுவதும் எத்தனை பேர் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர் என்று தெரியவரும் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்….

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்