அகில இந்திய அளவில் ஆணழகன் போட்டியில் தங்கம் வென்ற வாலிபர் செயின்பறிப்பு வழக்கில் கைது:கடன் தொல்லையால் விபரீத முடிவு

தண்டையார்பேட்டை: அகில இந்திய அளவில் நடந்த ஆணழகன்  போட்டியில் தங்க பதக்கம் வென்ற சென்னை வாலிபர், கடன் தொல்லை காரணமாக செயின் பறிப்பில் ஈடுபட்டு, போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சவுகார்பேட்டை கொண்டித்தோப்பு சிந்தா சாகிப் தெருவை சேர்ந்த ரத்னா தேவி (58), கடந்த 17ம் தேதி அதே பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்று, வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது, ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், ரத்தினா தேவி கழுத்தில் கிடந்த 3 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பினார்.இதுகுறித்து ஏழுகிணறு காவல் நிலையத்தில் ரத்னா தேவி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து செயின் பறித்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது. தொடர்ந்து, சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வரையுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையனை தேடி வந்தனர். இதனிடையே, நேற்று முன்தினம் காலை, கொரட்டூர் காவல் நிலைய பகுதியில், சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம், பைக்கில் வந்த ஆசாமி செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள், காவல் துறையினரின் வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்பட்டு, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள காவல் நிலையங்கள் உஷார் படுத்தப்பட்டது.இந்நிலையில், பூக்கடை காவல் உதவி ஆணையர் பாலகிருஷ்ணன் பிரபு தலைமையில் போலீசார் ஏழுகிணறு அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். தீவிர விசாரணையில் அவர், மண்ணடியை சேர்ந்த பி.டெக் பட்டதாரி முகமது பாசில் (22) என்பதும், பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதையடுத்து அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுபற்றி போலீசார் கூறியதாவது:முகமது பாசில் படிக்கும் வயதில் இருந்தே உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டவர். தீவிர பயிற்சி எடுத்து, கடந்த 2020ம் ஆண்டு அகில இந்திய அளவில் நடந்த இளையோருக்கான ஆணழகன்  போட்டியில் தங்க பதக்கம் வென்றுள்ளார். பின்னர், துபாயில் உள்ள நண்பர் மூலம், ஐபோன்களை வாங்கி சென்னையில் விற்பனை செய்து வந்துள்ளார். தொழிலில் நஷ்டம் காரணமாக பணத்தேவை அதிகரித்துள்ளது. இதனால், பலரிடம் கடன் பெற்றுள்ளார். அதனை திருப்பி கொடுக்க முடியாததால், கடன் கொடுத்தவர்கள் தொல்லை செய்துள்ளனர். இதனால், வேறு வழியின்றி கடந்த 17ம் தேதி முதன் முறையாக செயின் பறித்து, பூக்கடையில் உள்ள ஒரு கடையில் விற்றுள்ளார். அடுத்ததாக, கொரட்டூர் பகுதியில் செயின் பறித்துள்ளார். இதில் கிடைத்த பணத்தில் கடனை அடைக்க முயன்றுள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர். இதையடுத்து, அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்….

Related posts

63 வயது மனைவியை குத்தி கொன்ற 72 வயது கணவர்

12 டூவீலர்களை திருடிய ‘கோடீஸ்வரர்’ கைது: பல கோடி சொத்துக்கு அதிபதி

தாயுடன் கள்ளத்தொடர்பு; விவசாயி கொன்று வீச்சு: வாலிபர் கைது