₹87.20 லட்சத்தில் நலத்திட்ட உதவி

தர்மபுரி, ஜூலை 20: பாலக்கோடு அருகே பெரியனூர் கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில், 119 பயனாளிகளுக்கு ₹87.20 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளி அருகே பெரியனூர் கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம், கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடந்தது. முகாமில், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், 32 பயனாளிகளுக்கு ₹15.68 லட்சத்தில் இலவச வீட்டுமனை பட்டாக்கள், ஒருவருக்கு பட்டா மாறுதல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு ₹52.35 லட்சத்தில் முதியோர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இயற்கை மரண உதவித்தொகைகள் என மொத்தம் 119 பயனாளிகளுக்கு ₹87 லட்சத்து 19 ஆயிரத்து 749 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். முன்னதாக, பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

முகாமில், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, கலெக்டர் பேசுகையில், ‘மாரண்டஅள்ளி உள்வட்டத்தில் பெரியானூர், பெரியானூர் காலனி, புளியந்தோப்பு, செட்டிப்பட்டி, புதுப்பேட்டை, ஏழு குண்டூர், கொக்கிக்கல், பட்டாபி நகர் உள்ளிட்ட 8 குக்கிராமங்கள் உள்ளது. இப்பகுதி மக்களின் சிரமங்களை போக்கும் வகையில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. இதில், சுமார் ₹87.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன,’ என்றார். முகாமில், தர்மபுரி வருவாய் கோட்ட அலுவலர் கீதாராணி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சரவணன், பாலக்கோடு ஒன்றிய குழு தலைவர் பாஞ்சோலை கோபால், தனித்துணை கலெக்டர் சாந்தி, வேளாண்மை இணை இயக்குநர் விஜயா, பஞ்சப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் நாராயணசாமி, தாசில்தார், பிடிஓ.,க்கள் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை