₹60 லட்சம் செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு 3,712 புகார்களில் ₹35.18 கோடி இழப்பு ₹8.81 கோடி உடனடியாக மீட்பு

 

*சீனியர் எஸ்.பி. கலைவாணன் பேட்டி

புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த 3 மாதங்களில் தவறவிட்ட 250 செல்போன்களை (ரூ.60 லட்சம் மதிப்பு) சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து உரியவர்களிடம் நேற்று ஒப்படைத்தனர். கோரிமேடு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் சீனியர் எஸ்.பி. கலைவாணன் உரியவர்களிடம் ஒப்படைத்தார். அப்போது சைபர் கிரைம் எஸ்.பி. பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் போலீசார் உடனிருந்தார்.

தொடர்ந்து, சீனியர் எஸ்.பி. கலைவாணன் நிருபர்களிடம் கூறும்போது, 2024ல் என்சிஆர்பி போர்டல் மூலம் 3,712 புகார்கள் பெறப்பட்டன. இதில் இழப்பு தொகை ரூ.35.18 கோடி. இவற்றில் ரூ.8.81 கோடி உடனடியாக உரிய நேரத்தில் மீட்கப்பட்டது. இழக்கப்பட்டதில் 25 சதவீத தொகையை மீட்டுள்ளோம். முந்தைய ஆண்டு 2023ல் 3,556 புகார்தாரர்களில் ரூ.8.94 கோடியும், 2022ல் 1,158 புகார்களில் இழப்பு தொகை ரூ.73 கோடியும் என்சிஆர்பி போர்டல் மூலம் பெறப்பட்டது. இதில் முறையே ரூ.1.21 கோடி மற்றும் ரூ.10 லட்சம் மீட்கப்பட்டது. முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும் போது நடப்பாண்டு இருமடங்கு மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 2023-24ல் பெண்களுக்கு எதிரான குற்றத்தின் கீழ் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்துள்ளோம். குற்றவாளிகள் அனைவருமே தெரிந்த நபர்கள் அதாவது முன்னாள் காதலர், முன்னாள் கணவர் ஆவர். கடந்த 3 மாதங்களில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 250 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் தற்போது ஒப்படைத்துள்ளோம். மேலும், தற்போது வரை இணைய மோசடிகளில் ஈடுபட்ட சுமார் 600 சந்தேகத்திற்கிடமான செல்போன் எண்களை போர்டல் மூலம் தடுத்துள்ளோம்.

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜா மனைவி கோகிலா (38). இவரிடம் ஆன்லைன் முதலீடு ஆசை காட்டி ரூ.18 லட்சம் மோசடி செய்த துபைல் அகமது, பிரவீன், ராமச்சந்திரன் (32), முகமது அஞ்சார், பிரேமானந்த் (36), விமல்ராஜ் (34), அர்ஷத் (எ) மகாதேவன் (30) உள்ளிட்ட 8 பேரை கைது செய்துள்ளோம். குற்றவாளிகளால் நடத்தப்படும் பல்வேறு நிறுவனங்களில் 97 கம்ப்யூட்டர்கள், 5 லேப்டாப்கள், 6 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், குற்றவாளிகளுக்கு சொந்தமான 14 சொத்துகள் அடையாளம் காணப்பட்டன என்றார்.

`மோசடி குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்’

சீனியர் எஸ்.பி. கலைவாணன் மேலும் கூறுகையில், இப்போதெல்லாம் சைபர் குற்றங்கள் ட்ராய், மும்பை சைபர் கிரைம், பெடக்ஸ் ஆகியவற்றில் அழைப்பதாக கூறி பொதுமக்களை அச்சுறுத்தி, அவர்களின் செல்போன் நம்பர், ஆதார், வங்கி கணக்கு விவரங்களை பெற்று, மோசடியில் ஈடுபடுகின்றனர். மேலும், கடத்தல், பணமோசடி, போதை பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகள், மோசடி செய்பவர்கள் டிஜிட்டல் கைது என்றும் கூறி பொதுமக்களை அச்சுறுத்துகின்றனர்.

பாதிக்கப்பட்டவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க பணம் கொடுக்குமாறு கூறியும் மிரட்டுகின்றனர். இதுபற்றி பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். பார்சலில் போதை பொருள் வந்துள்ளதாக கூறி மிரட்டினால் நம்ப வேண்டாம். அறிமுகம் இல்லாத நபர்கள் வாட்ஸ்அப் காலில் வந்தால் எடுக்காதீர்கள். டிஜிட்டல் கைது செய்து விட்டோம் என போலீஸ் யூனிபார்மில் வீடியோ காலில் வந்து மிரட்டினால் நம்ப வேண்டாம். எது உண்மை, போலி என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் 1930 அல்லது 9489205246 என்ற தொலை பேசயில் தெரிவிக்கலாம் என்றார்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!!

உதகையில் இரண்டாவது சீசன்: அரசு தாவரவியல் பூங்காவில் சிறப்பு மலர் கண்காட்சி

தொழில்முனைவோர் மின்னணு மூலமாக சந்தைப்படுத்துதல் தொடர்பான விண்ணப்பங்கள் வரவேற்பு..!!