ஹைட்ரோபோனிக்ஸ் தோட்டம்!

வருடம் ரூ.70 லட்சம்சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பிரபலமான ஒரு பெயர், ராம்வீர் சிங். ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயம் மூலம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருவதே அவரது பிரபலத்துக்கு மூல காரணம். உத்தரப்பிரதேசத்தில் உள்ள பரேலி நகரைச் சேர்ந்தவர் ராம்வீர். பதிமூன்று வருடங்களுக்கு முன்பு முழுநேர பத்திரிகையாளராக வேலை செய்துவந்தார். 2009-ம் வருடம் அவருடைய நண்பரின் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். காய்கறிகளில் இருந்த வேதிப்பொருட்கள்தான் நண்பரின் தந்தைக்குப் புற்றுநோய் ஏற்பட முக்கியமான காரணம் என்பதை அறிந்த ராம்வீர் நிலைகுலைந்து போனார். தனது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இந்த நிலைமை வரக் கூடாது என்று இயற்கை விவசாயத்தில் இறங்கினார் ராம்வீர். இதற்காகத் தான் பார்த்துவந்த பத்திரிகை தொழிலையும் விட்டுவிட்டார். ராம்வீர் வசித்துவந்த இடத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அவருக்குச் சொந்தமாக பூர்வீக நிலம் இருந்தது. அங்கேதான் இயற்கை விவசாயம் செய்துவந்தார். இயற்கை விவசாயம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த நிலையில், விவசாயம் குறித்த அவரது தேடலும் அதிகமாகிக்கொண்டேபோனது. 2018-ம் வருடம் விவசாயம் குறித்த ஒரு நிகழ்வு துபாயில் நடந்தது. இதில் ராம்வீரும் கலந்துகொண்டார். அங்கே மண் இல்லாமல், குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தி செய்யப்படும் ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயம் குறித்த அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. தவிர, பூச்சிகளால் தாக்க முடியாதபடி இந்த விவசாயம் பாதுகாப்பானது. பூமியில் மட்டுமல்லாமல், விண்வெளியில் கூட இந்த விவசாயத்தைச் செய்ய முடியும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.சொந்த ஊருக்குத் திரும்பியவர் தனது மூன்று அடுக்கு வீட்டையே ஹைட்ரோபோனிக்ஸ் பண்ணையாக மாற்றிவிட்டார். மெக்னீசியம், பாஸ்பரஸ், நைட்ரஜன் என 16 கனிம வளங்கள் கொண்ட தண்ணீரை இந்த விவசாயத்துக்காகப் பயன்படுத்துகிறார் ராம்வீர். இப்போது அவரது பண்ணையில் 10 ஆயிரம் செடிகள் இருக்கின்றன. பிவிசி குழாய்கள் மூலம் அந்தச் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. ஸ்ட்ராபெரீஸ், காலிஃபிளவர் என ஏராளமான காய்கறிகள், பழவகைகள், கீரைகள், மூலிகைகள் விளைகின்றன. தன் குடும்பத்துக்குப் போக மீதியை விற்க ஆரம்பித்தார். இதற்காக தன் பண்ணைக்கு ‘விம்பா ஆர்கானிக் அண்ட் ஹைட்ரோபோனிக்ஸ்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். இன்று ராம்வீர் யாரையும் தேடிப்போய் விற்பது இல்லை. காய்கறிகளையும், பழங்களையும் வாங்க அவர் வீட்டில் வரிசை கட்டி நிற்கின்றனர் மக்கள். கடந்த வருடம் மட்டுமே 70 லட்சம் வருமானத்தை ஈட்டியிருக்கிறார் இந்த ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயி. – சக்தி

Related posts

வளம் கொடுக்கும் வான்கோழி!

பயிர்களைக் காக்கும் உயிர்வேலி!

வெள்ளாமைக்கு துணை நிற்கும் நுண்ணுயிரிகள்!