ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 240 கோடியில் நவீன பொழுதுபோக்கு பூங்கா: 80 சதவீத பணிகள் நிறைவு

சென்னை: ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ₹240 கோடியில் அமைக்கப்பட்டு வரும் நவீன பொழுதுபோக்கு பூங்காவில் 80 சதவீத பணிகள் நிறைவுபெற்றுள்ளதாக மெட்ரோ ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.சென்னை ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் திரு.வி.க பூங்கா அருகே பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு  மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி 10 வருடங்களுக்கு முன்பு தொடங்கியது.  இதனால் திரு.வி.க பூங்கா உருமாறியது. இதனால், இந்த பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத  நிலை ஏற்பட்டது. ரயில் நிலைய கட்டுமான பணிகள் முடிந்த பிறகு, இந்த பூங்கா பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன்,  எழில்மிகு  தோற்றத்தில் நவீன முறையில் சீரமைக்கப்படும், என மெட்ரோ நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ₹240 கோடியில் நவீன பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள திருவிக பூங்கா சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிதியுதவியுடன் சுமார் ₹240 கோடி மதிப்பில் புதுப்பொலிவுடன் நவீன முறையில் சீரமைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பூங்காவில் படிப்பகம், சறுக்கு பயிற்சி, குழந்தைகள் பூங்கா, திறந்தவெளி திரையரங்கு, கிரிக்கெட் பயிற்சி கூடம், நடைப்பயிற்சி பாதை, செயற்கை நீரூற்று, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக யோகா மற்றும் தியானப்பயிற்சி கூடம், கூடைப்பந்து, பூப்பந்து, கடற்கரை கைப்பந்து மைதானங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் 80 சதவீதம் முடிவு பெற்றுள்ளது. பூங்காவின் 4 புறமும் மியாவாக்கி காடு போன்ற பல்வேறு வசதிகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த நவீன பொழுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல், ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தின் அடித்தளத்தில் அனைத்து இலகுரக வாகனங்களும் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது அடித்தளத்தில் பெரிய வணிக வளாகம், உணவகம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த அடித்தளத்திற்கு மேற்பகுதியில் தான் நவீன பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. பூங்காவின் நுழைவாயிலில் இருந்து மெட்ரோ ரயில் நிலையம், தரைத்தளம், அடித்தளம் போன்ற இடங்களுக்கு எளிய வகையில் சென்று வர படிக்கட்டுகள், மின் தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது. பூங்கா கூடிய விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இவ்வாறு கூறினார்….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு