வேலை வாங்கி தருவதாக 48 லட்சம் மோசடி: மேன் பவர் நிறுவன மேலாளர் கைது: தம்பதிக்கு வலை

சென்னை: பள்ளிக்கரணையை சேர்ந்தவர் வினோத் (35), தனியார் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மெக்கானிக்கல் இன்ஜினியரான இவர், பல ஆண்டுகளாக கப்பலில் வேலை தேடி வருந்தார். சில நாட்களுக்கு முன், தனது பேஸ்புக் பக்கத்தில் ஆன்லைன் விளம்பரம் ஒன்றை பார்த்தார். அதில், மெக்கனிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு சுற்றுலா சொகுசு கப்பலில் வேலை உள்ளது, என கூறிப்பிடப்பட்டிருந்தது. அதை பார்த்த வினோத், விளம்பரத்தில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டபோது, எதிர் முனையில் பேசிய நபர்கள், நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு சான்றுகளுடன் நேர்முகத்தேர்வுக்கு வரும்படி கூறியுள்ளனர். அதன்படி வினோத், அந்த நிறுவன நேர்முக தேர்வில் கலந்து கொண்டார். அதில், அவர் தேர்வு செய்யப்பட்டதாக கூறிய அந்த நிறுவன உரிமையாளர் ராஜா (38), அவரது மனைவி திவ்யா (26) அகியோர், உடனே 1 லட்சம் செலுத்தினால் கப்பலில் வேலை என்று கூறியுள்ளனர். அதை நம்பிய வினோத், 1 லட்சத்தை அந்த நிறுவனத்தின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனால், சொன்னபடி வேலை வாங்கி தரவில்லை. இதனால், செலுத்திய பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அப்போது, நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் மேலாளர் தினகரன் ஆகியோர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி வினோத் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், அந்த மேன்பவர் நிறுவனம், சமூக வலைதளங்களில் கப்பலில் வேலை என்று விளம்பரம் செய்து, 48 பேரிடம் தலா 1 லட்சம் என 48 லட்சம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.  இதையடுத்து, நிறுவன உரிமையார்களான தம்பதி மற்றும் மேலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் தூத்துக்குடியில் பதுங்கி இருந்த மோசடி நிறுவன மேலாளர் தினகரனை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேன் பவர் நிறுவனத்தின் உரிமையாளர்களான ராஜா மற்றும் அவரது மனைவி திவ்யாவை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்….

Related posts

மாநில கல்லூரியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு லிப்ட் வசதியுடன் பிரத்யேக விடுதி: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: இ.கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்