வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி!: ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணி வழங்காமல் பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, உதவியாளர் பலராமன், என்.பாபுராய், எஸ்.கே.முத்துபாண்டியன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் விஜய நல்லதம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரில் பதிவான வழக்குகளில் முன்ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்கள். மனுவில், எங்கள் மீது புகார் கொடுத்துள்ள நபர்கள், ஏற்கெனவே அரசு வேலை வாங்கித் தருவதாக  கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பல புகார்கள் உள்ளன. பணம் பறிக்கும் நோக்கில் எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று உயர்நீதிமன்ற நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு நடைபெற்றது. அச்சமயம் ராஜேந்திர பாலாஜி சார்பில், இந்த குற்றத்தில் ராஜேந்திர பாலாஜிக்கு எந்த தொடர்பும் இல்லை என வாதிடப்பட்டது. கவுன்சிரி சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழங்கறிஞர் அசல் முகமது ஜின்னா, ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான புகாரில் 23 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் ராஜேந்திர பாலாஜிக்கு, உதவியாளர் பலராமன் மூலம் தான் பண பரிமாற்றம் நடைபெற்றதாக வாதிட்டார். மேலும் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அனைத்து ஆவணங்களும் உள்ளதாகவும், அவர் தொடர் குற்றவாளி என்றும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல்குமார், ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் எந்நேரமும் ராஜேந்திர பாலாஜி கைதாக வாய்ப்புகள் உள்ளது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை