வேலை தேடி சென்னையில் சுற்றிய எஸ்.பி. வேலுமணி அசுர வளர்ச்சி பெற்றது எப்படி? பரபரப்பு தகவல்கள் அம்பலம்

சென்னை: சொந்த ஊரில் வேலை கிடைக்காததால், சென்னை வந்த வேலுமணி இன்று பல நூறு கோடிக்கு அதிபதியானது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராகவும், முன்னாள் முதல்வராகவும் இருந்தாலும், கட்சியைப் பொறுத்தவரை வேலுமணியை கேட்காமல் எந்த முடிவும் எடுக்க முடியாது என்ற நிலையை அவர் உருவாக்கியுள்ளார். அவர் மூலம் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் மட்டும் 28 பேர் என்று கூறப்படுகிறது. ஆனால், அவரது ஆரம்ப கால கட்டம் மிகவும் மோசமாக இருந்ததாக கூறப்படுகிறது.வேலுமணியின் தந்தை பழனிச்சாமி, சாதாரண மில் தொழிலாளியாக இருந்தார். இவரது தாய் மயிலாத்தாள் சத்துணவு அமைப்பாளர். அதே நேரத்தில் குனியமுத்தூர் நகராட்சி கவுன்சிலராகவும் வெற்றி பெற்றார். வேலுமணி, முதுகலை பட்டம் பெற்றவர். எம்பில் முடித்துள்ளார். சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தார். பல இடங்களில் ஏறி இறங்கியும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும்,வேலையும் கிடைக்கவில்லை. இதனால், சொந்த ஊருக்கு வந்தவர், சிறு சிறு கான்ட்ராக்ட் எடுத்து வந்தார். ஜெயலலிதா கோவை வந்தபோது 100க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வெள்ளை நிற பேண்ட் மற்றும் ஜெயலலிதா படம் பொறித்த பனியனை தயாரித்து வரவேற்றார். இதை பார்த்த ஜெயலலிதா வேலுமணி குறித்து விசாரித்து அவருக்கு பொறுப்புகளை வழங்கினார்.இதனால் 2001 உள்ளாட்சித் தேர்தலில் குனியமுத்தூர் நகராட்சித் தலைவரானார். 2006 தேர்தலில் பேரூர் தொகுதிக்கு எம்எல்ஏ சீட் கேட்டார். ஆனால் பேரூர் தொகுதி கே.பி.ராஜூவுக்கு வழங்கப்பட்டது. ஆனால் வேலுமணியின் அதிர்ஷ்டம் ராஜூ மீது வழக்குகள் இருந்ததால் வேட்பாளர் மாற்றப்பட்டு வேலுமணி வேட்பாளராகி வெற்றியும் பெற்றார். பின்னர் 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் தொண்டாமுத்தூர் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். இவர், சசிகலாவின் உறவினர் ராவணன் மூலம்தான் சீட் வாங்கினார். இதனால் சசிகலாவின் தீவிர விசுவாசியாக இருந்தார். 2011ல் அவர் சிறப்பு திட்டங்கள் அமலாக்கம், வருவாய் மற்றும் சட்டத்துறை அமைச்சரானார். அப்போது, கோவை கலெக்டராக இருந்தவருக்கும் வேலுமணிக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் கலெக்டர் மாற்றப்பட்டார். இந்த தகவல் ஜெயலலிதாவுக்கு தெரிந்ததும், வேலுமணியின் அமைச்சர் பதவி, மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. ராவணன் மூலம் மீண்டும் இழந்த பதவியை பிடித்தார்.2016ம் ஆண்டு உள்ளாட்சித்துறை அமைச்சரானார். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, வேலுமணி, தங்கமணி ஆகியோரை அழைத்து டிடிவி.தினகரன் ஆலோசனை நடத்தினார். அப்போது, உங்களிடம் நாங்கள் ஒவ்வொரு மாதமும் ஜெயலலிதா வாங்கியதுபோல கட்சி நிதி வசூலிக்கவில்லை. மொத்தமாக நீங்களே வைத்துக் கொள்கிறீர்கள். ஆனால் கட்சிக்கு எதிராகவும், எனக்கு எதிராகவும் இருக்கிறீர்கள் என்று டிடிவி.தினகரன் கூறியுள்ளார். அப்போது டிடிவி.தினகரனுக்கும் வேலுமணிக்கும் மோதல் ஏற்பட்டது. தினகரனுடன் சண்டை போட்டு வந்தவர், எடப்பாடியுடன் சேர்ந்து டிடிவி.தினகரனை வெளியேற்றினார். அப்போது முதல் தனி ஆளுமையாக மாறினார். எடப்பாடிக்கு வலதுகரமாக இருந்தார். ஒரு கட்டத்தில் டெல்லியுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு தனியாகவும் செயல்பட தொடங்கினார்.கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் செலவு பொறுப்பை முழுமையாக ஏற்றுக் கொண்டார். தேர்தலில் தற்போது அவரது ஆதரவாளர்கள் மட்டும் 28 பேர் எம்எல்ஏக்களாக உள்ளனர். இதனால்தான் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மோதிக் கொண்டபோது, இருவருக்கும் வேண்டாம், வேலுமணிக்கு கொடுங்கள் என்று அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இவ்வளவு செல்வாக்காக அவர் கட்சிக்குள் வலம் வருகிறார். சென்னையில் இவரது ஆதரவாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் பல புதிய நிறுவனங்களை தொடங்கியுள்ளனர். இவரது ஆதரவினால்தான் இவ்வளவு பெரிய நிறுவனங்கள், ஒரே ஆண்டில் பல கோடி முதலீடு, வளர்ச்சி என்று பெரும் தொழில் அதிபர்களானார்கள். சென்னைக்கு வேலை தேடி வந்தவர், இன்று பல நூறு கோடிக்கு அதிபதியானார் என்று அதிமுகவினர் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.* தேர்தல் செலவுக்கு ரூ.50 லட்சம் தந்தவர் பினாமி 2006ல் வேலுமணிக்கு எம்எல்ஏ சீட் கிடைத்தது. அப்போது தனது சொந்த வீட்டை அடமானம் வைத்து ரூ.50 லட்சத்தை சந்திரசேகர், வேலுமணிக்கு வழங்கினார். அந்த பணத்தை செலவு செய்துதான் வேலுமணி எம்எல்ஏ ஆனார். உள்ளாட்சித்துறை அமைச்சரானதும், தனது நிழலாகவே வைத்துக் கொண்டார். இதனால்தான் வேலுமணியின் பினாமியாக அவர் செயல்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகின்றனர்….

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு