(வேலூர்) 9ம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி பலி வேலூர் அருகே சோகம்

 

பள்ளிகொண்டா, மே 27: வேலூர் அருகே கிணற்றில் குளிக்க முயன்றபோது நீரில் மூழ்கிய 9ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக பலியானார். வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் அடுத்த அப்துல்லாபுரம் திலகர் தெருவை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன். இவரது மகன் ஜெகதீஷ்(14). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு முடித்து விட்டு 10ம் வகுப்பு செல்ல இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் ஜெகதீஷ் தனது நண்பர்களுடன் விளையாடுவதற்காக வெளியே சென்றார். பின்னர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், நேற்று வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் சிறுவன் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் விரிஞ்சிபுரம் போலீசார் சிறுவன் சடலத்தை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் காணாமல்போன ஜெகதீஷ் என்பது தெரியவந்தது. மேலும், நேற்று முன்தினம் நண்பர்களுடன் விளையாடுவதற்காக வெளியே சென்றிருந்த ஜெகதீஷ், பின்னர் அங்குள்ள கிணற்றில் இறங்கி குளிக்க முயன்றதும், அரைகுறையாக நீச்சல் தெரிந்த நிலையில் நீரில் மூழ்கி பலியானதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவன் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்