வேலூர் மாவட்டத்தில் 2வது நாளாக இன்று 144 இடங்களில் காய்ச்சல் கண்டறிய சிறப்பு முகாம்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 2வது நாளாக இன்றும் காய்ச்சல் கண்டறிய சிறப்பு முகாம் 144 இடங்களில் நடந்தது. தமிழகம், புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக இன்புளுயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. மழை காலங்களில் பாதிப்பு ஏற்படுவது வழக்கமானதுதான். எனவே பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என சுகாதார துறை தெரிவித்துள்ளது. மேலும் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. டாக்டர்கள் அங்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதால் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதுச்சேரி அரசு விடுமுறை அளித்துள்ளது. புதுச்சேரியில் நேற்று முன்தினம் 830 பேருக்கு காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை காய்ச்சலை கட்டுப்படுத்தும் முறையில் தீவிரம் காட்டியுள்ளது. மேலும் தமிழகத்தில் நேற்று 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற்றது.வேலூர் மாவட்டத்தில் நேற்று 144 இடங்களில் காய்ச்சல் கண்டறிய சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் 16 ஆயிரத்து 961 பேர் பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 49 பேருக்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, 2வது நாளாக இன்றும் வேலூர் மாவட்டத்தில் காய்ச்சல் கண்டறிய சிறப்பு முகாம்கள் 144 இடங்களில் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் குறித்து பரிசோதனை செய்து கொண்டனர். இவர்களில் 84 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சலால் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்….

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு