வேலூர் அடுத்த பெருமுகையில் மெக்கானிக் வீட்டில் 20 சவரன் நகை திருடிய பெண் உட்பட 2 பேர் கைது

வேலூர், ஆக.8: வேலூர் அடுத்த பெருமுகையில் மெக்கானிக் வீட்டில் தங்க நகைகள் திருடிச் சென்ற சம்பவத்தில் பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் அடுத்த பெருமுகை இந்திரா நகரை சேர்ந்தவர் கோகுல்(38). மெக்கானிக். இவரது வீட்டில் கடந்த 1ம் தேதி ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் 20 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். இதுதொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் நடந்த வீட்டின் அருகில் இருந்த மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த 100 சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் சம்பவம் நடந்த அன்று திருட்டு நடந்த வீட்டுக்கு பைக்கில் வந்த ஆண் மற்றும் பெண் என இருவர் உள்ளே நுழைந்து நகைகளை திருடிச் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையிலான தனிப்படையினர் அவர்களை பிடிக்க வலைவீசினர்.

இந்த நிைலயில் குற்றவாளிகள் குறித்து கிடைத்த தகவலையடுத்து காஞ்சிபுரம் அடுத்த மேல்பாக்கம் செட்டேரியை சேர்ந்த வேளாங்கண்ணி(27), மேல்பாக்கம் சிறுவாச்சூர் குப்பைக்கல்மேடு கிராமத்தை சேர்ந்த செல்வா(23) ஆகியோரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 2 பேரும் ஊர், ஊராக சென்று அம்மி, உரல் ஆகியவற்றை கொத்தும் தொழில் செய்து வருவதும், சம்பவத்தன்று பெருமுகை இந்திரா நகரில் சென்றபோது மெக்கானிக் வீடு பூட்டப்பட்டிருப்பதும், அந்த தெருவில் நடமாட்டம் இல்லாததையும் அறிந்து தங்களிடம் கல்கொத்த பயன்படும் உளி, சுத்தியலை கொண்டு ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து நகைகளை திருடிச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 7.5 சவரன் நகைகளை கைப்பற்றினர். மேலும் கைது செய்யப்பட்ட 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்