வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு!: சென்னையில் சிறப்பு குழந்தைகள் காப்பகத்தில் 8 ஊழியர்கள் உட்பட 75 பேருக்கு தொற்று உறுதி..!!

சென்னையில் சிறப்பு குழந்தைகள் தங்கவைக்கப்பட்டுள்ள தனியார் காப்பகத்தில் 8 ஊழியர்கள் உட்பட 75 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவுக்கு இலக்காகி வருகின்றனர். உயிரிழப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் பலர் வீடுகளிலேயே தனிமை படுத்தி கொண்டுள்ளனர். இந்நிலையில், சென்னையில் சிறப்பு குழந்தைகள் காப்பகத்தில் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 
கீழ்ப்பாக்கம் ஹால்ஸ் ரோடு பகுதியில், சிறப்பு குழந்தைகளுக்கு என தனியார் காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 10 வயது சிறுவர்கள் முதல் 30 வயது இளைஞர்கள் வரை மொத்தம் 172 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 8 ஊழியர்கள் மூலம் சிறப்பு குழந்தைகள் அனைவரும் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமை அங்குள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 
இதில் 8 ஊழியர்கள் உட்பட 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்கள் அனைவரும் காப்பகத்தின் உள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காப்பகத்தில் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஆசிரியர் பயிற்சி உள்ளது. இதில் பாடம் நடத்த வரும் ஆசிரியர் ஒருவர் மூலமே கொரோனா பரவி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்