வெள்ளப்பெருக்கு கட்டுக்குள் வந்தது; குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு.!

தென்காசி: கடந்த சில தினங்களாக பெய்து வந்த தொடர்மழை நேற்று சற்று ஓய்ந்தது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு கட்டுக்குள் வந்தபோதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தென்காசி, குற்றாலம் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று காலை முதல் மழை சற்று ஓய்ந்தது. மாலை வரை லேசான வெயில் காணப்பட்டது. மழை குறைந்ததால் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கும் கட்டுக்குள் வந்த நிலையில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது‌. ஐந்தருவியில் ஆண்கள் பகுதியில் நன்றாகவும் பெண்கள் பகுதியில் குறைவாகவும் தண்ணீர் விழுகிறது. பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. 
இருந்தபோதும் கொரோனா ஊரடங்கால் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்வதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து 7 மாதங்களாக குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிப்பதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை வலியுறுத்தி சிஐடியு போராட்ட அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி அளிப்பது குறித்து டிச. 10ம் தேதிக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்

சென்னை மெரினா கடற்கரையில் வான்சாகசக் நிகழ்ச்சி