வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டவை கும்பகோணம் கோர்ட்டில் 10 சிலைகள் ஒப்படைப்பு

கும்பகோணம்: வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 10 தமிழக கோயில் சிலைகள் கும்பகோணம் நீதிமன்றத்தில் நேற்று ஒப்படைக்கப்பட்டது.தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்கப்பட்ட புராதன சிலைகள் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் புலன் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தீவிர விசாரணைக்கு பின், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் அருங்காட்சியங்களில் இருந்த 10 உலோக மற்றும் கற்சிலைகள் டெல்லியில் உள்ள மத்திய தொல்பொருள்துறை வசம் ஒப்படைக்கப்பட்டன. இதில் மீட்கப்பட்ட தமிழக கோயில் சிலைகளை, ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, கடந்த மாதம் 1ம் தேதி டெல்லியில் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபுவிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, போலீசார் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக அவற்றை சென்னை கொண்டு வந்தனர்.விசாரணையில், மீட்கப்பட்ட சிலைகள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கோயில்களுக்கு சொந்தமானது என தெரிய வந்தது. இதையடுத்து 10 சிலைகளும், போலீஸ் வாகனத்தில் கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு நேற்றுமுன்தினம் கொண்டு வரப்பட்டது. நேற்று கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சண்முகப்பிரியா முன்னிலையில் சிலைகள் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்தந்த சிலைகளுக்கு சொந்தமான கோயில்கள் நிர்வாக அலுவலர்கள் தனித்தனியாக மனு அளித்தனர். அந்த மனுக்கள் நாளை பரிசீலனை செய்யப்படும் என நீதிபதி தெரிவித்தார். பின்னர் 10 சிலைகளும் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன….

Related posts

ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்: பக்தர்கள் கடும் அவதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாண்டூர் கிராம மக்கள் சாலை மறியல்

பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் கூவம் ஆற்றில் கட்டிட கழிவுகள் அகற்றம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை