வெடிகுண்டு தயாரிக்க குறிப்பு வைத்திருந்த 3 இளைஞர்கள் வீட்டில் போலீசார் சோதனை: பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ளவர்களா என தீவிர விசாரணை

தண்டையார்பேட்டை: வடசென்னையில் வெடிகுண்டு தயாரிக்க குறிப்பு வைத்திருந்த 3 இளைஞர்கள் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இவர்கள், பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ளவர்களா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராயபுரம் கல்மண்டபம் சாலையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள், போலீசாரை பார்த்து இருசக்கர வாகனத்தை திருப்பி தப்பி ஓடினர். போலீசார் அந்த வாகனத்தை துரத்தி பிடிக்க முயன்றபோது, பின்னால் அமர்ந்திருந்த இளைஞரின் முதுகில் மாட்டி இருந்த பை கீழே விழுந்துள்ளது. அதை சோதனை செய்ததில், மறைந்த இந்திய தேசிய லீக் அமைப்பின் தலைவர் பழனிபாபா பற்றியும், அவருடைய கருத்தும், வசனங்களும் நோட்டில் எழுதி வைக்கப்பட்டு இருந்துள்ளது. மேலும், சில பேப்பர் கட்டிங் வைத்து இருந்ததும்  தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து காசிமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்து, அந்த 3 பேரை காசிமேடு சிக்னலில் மடக்கி பிடித்தனர். பின்னர் ராயபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து நேற்று விசாரணை நடத்தினர்.அதில், தண்டையார்பேட்டை புது வினோபா நகரை சேர்ந்த நாகூர் மீரான் (22), நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த ஜாஹிர் உசேன் (20), அதே பகுதியை சேர்ந்த  நாவாஸ் (19) என்பதும், பர்மா பஜாரில் செல்போன் கடையில் வேலை பார்த்து வருவதும் தெரிந்தது. இதில், நாகூர் மீரான் தேசிய லீக் கட்சியின்  பகுதி செயலாளராக உள்ளதும், பழனி பாபா பற்றி யூடியூபில்  பார்த்து அவருடைய தீவிர ஆதரவாளானதும் தெரியவந்தது. சந்தேகத்தின்பேரில் அந்த 3 பேரின் வீட்டை சோதனை செய்தபோது ஒரு நோட்டில் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்பது எழுதி வைத்திருந்தது. இது, போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்கள், பயங்கரவாத கும்பலுடன் தொடர்பில் இருந்தவர்களா, நாச வேலையில் ஈடுபட முயன்றனரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்