வீட்டை சுத்தம் செய்யுமாறு தாய் கண்டித்ததால் சிறுமி தற்கொலை

 

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சபாபதி(42). இவர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ராகேஷ்(16), சஞ்சித்(12) ஆகிய 2 மகன்களும், தர்ஷினிகா(15) என்ற ஒரு மகளும் உள்ளனர். 3 பேரும் பன்னூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 4ம் தேதி சபாபதி வழக்கம்போல் வேலைக்குச் சென்றார். அங்கேயே இரவு தங்கி அவர் வேலை பார்த்துள்ளார்.

கடந்த 5ம் தேதி கவியரசி வேலைக்கு சென்றபோது, தனது மகள் தர்ஷினிகாவிடம் மாலையில் பள்ளியில் இருந்து வந்ததும் வீட்டை சுத்தம் செய்து வைக்க வேண்டும் என்றும், வெளியே சென்று விளையாடக் கூடாது என்றும் கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சனிக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த தர்ஷினிகா வீட்டை சுத்தம் செய்யப் போவதாக கூறிவிட்டு, தம்பி சஞ்சித்தை விளையாட அனுப்பி உள்ளார். சிறிது நேரம் கழித்து சஞ்சித் வந்து பார்த்தபோது, வீட்டின் உள்பக்கம் தாழிட்டிருந்தது.

இதனையடுத்து ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது, படுக்கை அறையில் தர்ஷினிகா மின்விசிறியில் புடவையால் தூக்கில் தொங்குவதைக் கண்டு சஞ்சித் அதிர்ச்சி அடைந்தான். பின்னர் அக்கம் பக்கத்தினர் தர்ஷினிகாவை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தர்ஷினிகா ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

விழுப்புரம் அருகே பரபரப்பு திருமணமான 4 மாதத்தில் விவாகரத்து வரன் பார்த்தவருக்கு சரமாரி அடி உதை மாப்பிள்ளை மீது போலீஸ் வழக்குப்பதிவு

டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மது பாட்டில்கள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிப்பதை தடுக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நாராயணசாமி பரபரப்பு பேட்டி