விரைவில் நேரடி வகுப்புகள் தொடங்க வாய்ப்பு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம், சீருடை விநியோகம்

நெல்லை: 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விரைவில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகி வரும் நிலையில், மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் பாட புத்தகங்கள் வழங்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பரவல் காரணமாக கல்வி நிறுவனங்கள் நேரடியாக செயல்படுவதில் சிக்கல் நீடிக்கிறது. கடந்த கல்வியாண்டில் 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே நேரடி வகுப்புகள் நடந்தன. நடப்பு கல்வியாண்டில் தற்போது 9 முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளில் உள்ள வகுப்பறை இடவசதிக்கு ஏற்ப சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. இவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து சுகாதாரத் துறை, கல்வித்துறை வல்லுனர்கள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இதன் முடிவுகளை நாளை (15ம் தேதி) தமிழக முதல்வரிடம் அளிக்க வாயப்புள்ளது. அதன்பிறகு உயர் வல்லுனர் குழுக்களுடன் ஆய்வு செய்து 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை திறப்பது குறித்த நெறிமுறைகளை அறிவிக்கப்படும் என தெரிகிறது.  அவ்வாறு அறிவிக்கப்பட்டால் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் அவர்களுக்கும் நடைபெறும். இதனால் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேவையான இலவச பாடபுத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றை மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு பெற்றோருடன் வந்து ஆர்வமுடன் பெற்றுச் செல்கின்றனர். அவர்கள் கூறுகையில், எங்களுக்கும் நேரடி வகுப்புகள் எப்போது தொடங்கும் என்ற ஆவலாக உள்ளது. வகுப்புகள் தொடங்கும் போது நேரில் வந்து பயில தயாராக இருக்கிறோம் என்றனர்….

Related posts

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கானத்தூர் முதல் மாமல்லபுரம் வரை இசிஆரில் சைக்ளோத்தான் போட்டி: 1300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு