விருதுநகர் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை பாரத ஸ்டேட் வங்கி மேளாலரிடம் ஒப்படைப்பு

சாத்தூர்: விருதுநகர் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கையை வருவாய் துறை அமைச்சர் திரு.K.K.S.S.ராமச்சந்திரன் (ம) மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை  அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் பாரத ஸ்டேட் வங்கி, சாத்தூர் கிளை முதன்மை மேளாலரிடம் ஒப்படைத்தனர். கடந்த 10 ஆண்டுகளாக திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களில் திருக்கோயிலுக்குத் தேவைப்படும் இனங்கள் நீங்கலாக ஏனைய இனங்களை மும்பையிலுள்ள ஒன்றிய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி சொக்கத்தங்கமாக மாற்றி திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து அதிலிருந்து பெறப்படும் வட்டி மூலமாக திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகளை கண்காணிப்பதற்கு 3 மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு ஓய்வுபெற்ற மாண்பமை நீதியரசர்கள் தலைமையிலான குழுக்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும்.“ என அறிவிக்கப்பட்டது. இவ்வறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் மதுரை மண்டலத்திற்கான தலைவராக ஓய்வுபெற்ற மாண்பமை உயர்நீதிமன்ற நீதியரசர் செல்வி.ஆர்.மாலா அவர்கள் தலைமையிலான குழு அரசால் அமைக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம், இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்களால் உண்டியலில் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட பொன் இனங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு திருக்கோயிலின் உபயோகத்திற்கு தேவைப்படாமல் தொகுப்பாக வைக்கப்பட்டிருந்த பலமாற்றுப் பொன் இனங்கள் மாண்பமை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் செல்வி.ஆர்.மாலா அவர்கள் முன்னிலையில் 13.10.2021, 18.10.2021, 19.10.2021 மற்றும் 20.10.2021 ஆகிய நாட்களில் அரக்கு, அழுக்கு, போலிக்கற்கள் மற்றும் இதர உலோகங்கள் நீக்கப்பட்டு 27,236.600 கிராம் எடையுள்ள பலமாற்றுப் பொன் இனங்கள் பிரித்தெடுக்கப்பட்டது. மேற்படி அரக்கு, அழுக்கு, போலிக்கற்கள் மற்றும் இதர உலோகங்கள் நீக்கப்பட்ட பலமாற்றுப் பொன் இனங்களை இத்திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் குழுத் தீர்மானத்தின் அடிப்படையில் மும்பையிலுள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமாக உருக்காலையில் உருக்கி சுத்தத்தங்கக் கட்டிகளாக மாற்றி RBI வங்கியின் Revamped Gold Deposit Scheme, 2015 (GDS, 2015) திட்டத்தின் கீழ் தங்கப்பத்திரமாக முதலீடு செய்திடும் பொருட்டு 27,236.600 கிராம் பலமாற்றுப் பொன் இனங்கள் திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் பாரத ஸ்டேட் வங்கி, சாத்தூர் கிளை முதன்மை மேளாலரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பல மாற்றுப் பொன் இனங்கள் பாரத ஸ்டேட் வங்கியின் மூலமாகவே ஒன்றிய அரசுக்குச் சொந்தமான மும்பை உருக்காலை நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, மும்பை உருக்காலையில் மாண்பமை நீதியரசர் (ஓய்வு) மற்றும் திருக்கோயில் நிர்வாகிகள் முன்னிலையில் மீண்டும் எடைபோடப்பட்டு, சுத்தத் தங்கக்கட்டிகளாக மாற்றி பாரத ஸ்டேட் வங்கியில் தங்கப்பத்திரங்களாக இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் பெயரில் முதலீடு செய்யப்படும். இம்முதலீட்டிலிருந்து கிடைக்கப்பெறும் வட்டி தொகை இத்திருக்கோயில் சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்தப்படும். இந்நிகழ்ச்சியில் நீதியரசர்(ஓய்வு) செல்வி.ஆர்.மாலா, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப,  திருக்கோயில் அறங்காவலர்கள் மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்….

Related posts

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இன கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி