வினாடிக்கு 2,320 கன அடி உபரிநீர் முழுவதுமாக வெளியேற்றம் மீண்டும் 70 அடியை எட்டியது வைகை அணை-கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை

ஆண்டிபட்டி : வடகிழக்கு பருவமழை தொடர்வதால் வைகை அணையின் நீர்மட்டம் மீண்டும் 70 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 320 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. அணை இந்த ஆண்டில் ஏற்கனவே இருமுறை முழுக்கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது. மேலும் வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் மழையளவு குறைந்ததால் அணையின் நீர்மட்டம் மெதுவாக சரிந்தது.இந்நிலையில் தேனி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் வைகை அணைக்கு வரும் தண்ணீரின் அளவு உயர்ந்தது. இதன்காரணமாக 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் நேற்று காலை மீண்டும் 70 அடியாக உயர்ந்தது. இதையடுத்து வைகை அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் உபரிநீராக திறந்து விடப்படுகிறது. இதன்படி வினாடிக்கு 2,320 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால், திறக்கப்படும் உபரிநீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.எனவே தேனி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த ஆற்றங்கரையோர மக்கள் வைகை ஆற்றில் இறங்கவோ, கடந்து செல்லவோ முயற்சிக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆண்டு தொடக்கம் முதலே அணையின் நீர்மட்டம் குறையாமல் இருப்பதால் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….

Related posts

3 புதிய குற்றவியல் சட்டம்.. மருத்துவர்களை சிறையில் அடைக்கும் தண்டனை பிரிவை நீக்குக: அமித்ஷாவுக்கு கலாநிதி வீராசாமி எம்பி கடிதம்..!!

தேவை அதிகரிப்பதால் தோழி விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு

பொதுமாறுதல் கலந்தாய்வு: 3,000 ஆசிரியர்கள் இடமாற்றம்