விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது ஆரணி டவுன் பகுதியில்

ஆரணி, செப்.12: ஆரணி டவுன் பகுதியில் விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து கடந்த 5 நாட்களாக பொதுமக்கள் வழிப்பட்டு வந்தனர். இந்நிலையில், ஆரணி டவுன் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவின் 5ம் நாள் நிறைவாக நேற்று விநாயகர் சிலைகள் விஜர்சனம் நடந்தது. அப்போது, ஆரணி டவுன் அண்ணாசிலை அருகில் நடந்த ஊர்வலத்திற்கு, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தாமோதிரன்(எ) தாமு தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் முன்னிலை வகித்தார். இதில், மாநில செயலாளர் ரத்தினகுமார், கோட்ட பொறியாளர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு விநாயகர் சிலை ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து, மேள தாளத்துடன் இந்து முன்னணியினர் மற்றும் சிறுவர்கள் பல்வேறு சாமி வேடங்கள் அணிந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஆரணி டவுன் அண்ணாசிலையில் தொடங்கி புதிய, பழைய பஸ்நிலையம், காந்திசாலை, வடக்குமாட வீதி, பெரியக் கடை வீதி, எம்ஜிஆர் சிலை, பெரிய கடை வீதி, சத்தியமூர்த்தி சாலை, பையூர் செல்லும் சாலை வழியாக வாழப்பந்தல் செல்லும் சாலை வரை பேண்டு வாத்தியத்துடன், விநாயகர்,சிவன், பார்வதி, முருகன் உள்ளிட்ட பல்வேறு சுவாமி வேடங்கள் அணிந்து, செண்டை மேளம், பரதநாட்டியம், சிலம்பாட்டம், நடனமாடிக் கொண்டு ஊர்வலமாக விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டது.

தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் இந்து முன்னணியினர் பையூர் பாறை குளத்தில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டது. ஊர்வலத்தின் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க ஏடிஎஸ்பி சிவானுபாண்டியன் தலைமையில் டிஎஸ்பிகள் ரவிச்சந்திரன், சின்ராஜ், மணிமாறன், ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் ராஜாங்கம், விநாயகமூர்த்தி, மகாலட்சுமி, பிரபாவதி, ஜீவராஜ்மணிகண்டன், சண்முகம் தலைமையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதேபோல், ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட சிலைகள் நேற்று கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கொண்டு சென்று, அங்குள்ள ஏரி, கிணறுகள், குளங்களில் கரைக்கப்பட்டது. இதில், எஸ்ஐ சுந்தரேசன், தனிபிரிவு போலீசார்கள் ஜோதி, வினோத் மற்றும் இந்து முன்னணியினர், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்