வித விதமான ஸ்வீட்… வெறும் நூறு ரூபாயில்…

சென்னை நெடுஞ்சாலையில் ஓர் இனிப்பு கிராமம்கடலூரில் இருந்து விருத்தாசலம் செல்லும் மெயின் சாலையில் நடுத்தர டவுன் கிராமமாக அமைந்திருக்கும் ஊர் குள்ளஞ்சாவடி. இங்குதான் லட்டு, ஜிலேபி, மைசூர் பாகு என பல வகையான இனிப்புகளை ரூ.100க்கு விற்பனை செய்கிறார்கள். இந்த ஊரில் உள்ள அனைவருமே இனிப்பு பலகாரம் செய்வதை மட்டுமே தொழிலாக செய்கின்றார்கள். நெடுஞ்சாலையில் செல்லும் அனைவரும், சாலையின் இருபுறமும் இனிப்பு வகைகள் சுடச்சுட தயாராகிக் கொண்டிருப்பதை நாவில் எச்சில் ஊற பார்த்து செல்வார்கள். விறகு அடுப்பில் தீ திகுதிகுவென எரிந்துகொண்டிருக்கும். அதில் கொதிக்கும் எண்ணெய்ச் சட்டிகளில் ஜிலேபி உள்ளிட்ட இனிப்பு வகைகள் வெந்துகொண்டிருக்கும். பெண்கள்  ஒருபுறம் கடலை மற்றும் அரிசி மாவை பிசைந்து கொண்டிருப்பார்கள். மறுபுறம் எண்ணெய் சட்டியில் வேக வைத்த இனிப்பு பதார்த்தங்களை எடுத்து உலர வைத்துக்கொண்டிருப்பார்கள். இன்னொரு புறம் தயாரான பதார்த்தங்களை அட்டை பாக்ஸ்களில் அடுக்கிக்கொண்டிருப்பார்கள். இந்த பணிகள் வருடத்தின் அனைத்து நாட்களும் தொய்வின்றி தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும். மழை, வெயில் என எந்த காரணத்திற்காகவும் இந்த இனிப்பு அடுப்புகள் எரிவதை நிறுத்தாது. இரவில் சுமார் 10 மணிக்கு மேல் அணையும் அடுப்பு மறுநாள் காலை 6 மணி வரைதான் ஓய்வெடுக்கும். பின்னர் மீண்டும் தனது வேலையில் பிசியாகிவிடும். இந்த அளவுக்கு இனிப்பு தயாரிப்புத்தொழில் இங்கு விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும். இந்த வேலையில் பெரும்பாலும் பெண்கள்தான் ஈடுபடுகிறார்கள். ஸ்வீட் ஸ்டால்களில் குறைந்தபட்சம் ரூ.200 முதல் அதிகபட்சமாக ஆயிரம் வரை விலை வைத்து விற்கப்படும் இனிப்பு வகைகள் மிகக் குறைந்த விலைக்கு விற்கப்படுவது எப்படி? என்ற கேள்வியுடன் இனிப்புத் தயாரிப்பு தொழிலில் ஈடுபடும் வெள்ளச்சி என்பவரிடம் கேட்டோம். ஒரு கையில் ஜாங்கிரி பிழிந்துகொண்டே, குள்ளஞ்சாவடிக்கு குறைந்த விலை இனிப்பு அறிமுகமான கதையை கூற ஆரம்பித்தார். ‘எங்க தாத்தா மாணிக்கத்திற்கு சொந்த ஊர், அருகில் உள்ள குச்சிப்பாளையம்தான். ரயில்வேயில் வேலை கிடைச்சதால இந்த ஊருக்கு குடும்பத்துடன் வந்துட்டாரு. இங்குள்ள ரயிலடியில்தான் அவருக்கு வேலை. எங்க அப்பா ஆறுமுகம் ஸ்வீட்டு கடையில் வேலை பார்த்ததால, அவர் அனைத்து ஸ்வீட்டு வகைகளையும் தயாரிக்க கத்துக்கிட்டாரு. இதனிடையே இப் பகுதியில நடக்கும் கல்யாணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு ஸ்வீட்டு தயாரிக்க கூப்பிட்டிருக்காங்க. அதுல அவரு சிறப்பா செஞ்சி கொடுத்ததால சுற்றுப்புற பகுதியில எல்லாம் தொடர்ந்து கூப்பிட ஆரம்பிச்சாங்க. இதுக்காக அண்டா வாணலி உள்ளிட்ட பாத்திரங்கள தலையில சுமந்துகிட்டு போயி லட்டு, ஜாங்கிரின்னு செஞ்சி கொடுத்துட்டு வருவாரு. ஸ்வீட்டு செய்ய பயன்படுத்துற சர்க்கரை அளவை வச்சி கூலி கொடுப்பாங்க. 1 மணங்கு சர்க்கரைக்கு 2 அணா கூலி கொடுப்பாங்க. 1 மணங்குங்கிறது 12 கிலோ சர்க்கரை. எத்தனை மணங்கு சர்க்கரை பயன்படுத்தப்படு தோ அதுக்கேத்த மாதிரி கூலி கிடைக்கும். நல்ல விசேஷம், துக்க நிகழ்வுனு எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அப்பா ஸ்வீட்டு செஞ்சு கொடுப்பாரு. எங்க அப்பாவுக்கு 3 பெண் பிள்ளைங்க, ஒரு ஆண். பெண் பிள்ளைகளுக்கு சுந்தரி, வெள்ளச்சி, அமைதின்னு பேரு வச்சாரு. அப்பா கூட போயி நாங்க 4 பேரும் இந்த தொழிலை கத்துகிட்டோம். எல்லோருக்கும் கல்யாணம் ஆகி பேரப்பிள்ளைங்க இருக்காங்க. வெளிய போய் தொழில் செஞ்ச நாங்க சுமார் ஏழெட்டு வருசத்துக்கு முன்ன குள்ளஞ்சாவடியில இருக்குற எங்க வீட்டுலயே தொழில் செய்ய ஆரம்பிச்சோம். மக்கள் தொடர்ந்து ஆதரவு தர்றாங்க. இதனால தொடர்ச்சியா ஸ்வீட்டு ஆர்டர் வந்துகிட்டு இருக்கு. தினமும் காலை 7 மணிக்கு தொடங்கி ராத்திரி 7 மணி வரை ஸ்வீட்டு போடுவோம். முகூர்த்த நாட்கள்ல காலை 6 மணிக்கே வேலைகளை தொடங்கிடுவோம். ராத்திரி 10 மணியை தாண்டியும் வேலை நடக்கும். தீபாவளி, பொங்கல் சமயங்கள்ல இன்னும் அதிகமா வேலை நடக்கும். நாங்க எல்லோரும் தனித்தனியா வீட்டுலேயே இந்த தொழிலை பண்றோம். குறைஞ்ச பட்சம் 5 கிலோ முதல் 50 கிலோ வரை ஆர்டர் கொடுக்கிறாங்க. இது இல்லாம கடைக்கு நேரில் வந்து 1 கிலோ, 2 கிலோன்னு வாங்கிட்டு போறாங்க. குறைஞ்ச லாபமே போதும்னு நாங்க கிலோ 100 ரூபாய்க்கு தர்றோம்.வெளியில் போய் செஞ்சு கொடுத்தா கிடைக்கிற கூலியை விட, இங்க நாங்களே தொழில் பண்றதால ஓரளவு காசு கிடைக்குது. கடலைப் பருப்பு, அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்து மாவை தயார் பண்ணிக்கிறோம். சுற்றுப்புற கிராமத்துல கிடைக்கிற தேக்கு, பலா மர விறகுகள அடுப்புக்கு பயன்படுத்துறோம். என் மகன், மகள், மருமகள் எல்லாம் எங்களுக்கு ஒத்தாசையா இருக்காங்க. இதனால இந்த தொழில் தொடர்ந்து நடந்துகிட்டு இருக்கு’ என்கிறார். வெள்ளச்சியை போல அவரது சகோதரிகள், சகோதரிகளின் பிள்ளைகள், சகோதரர்களின் பிள்ளைகளும் 100 ரூபாய் இனிப்பு தயாரிப்பு தொழிலில் ஈடுபடுகிறார்கள். இதில் வெள்ளச்சியின் சகோதரர் சுப்பிரமணியனின் மகளான சுமதி தனது இனிப்பு தயாரிப்பு அனுபவம் குறித்து கூறுகையில், ‘எங்க தாத்தாவுக்கு பிறகு பாட்டி இந்த தொழில கத்துக்கிட்டாங்க. நாங்களும் சின்ன வயசில இருந்து இந்த தொழில்ல இருக்கிறதால குள்ளஞ்சாவடியில தனியா தொழில் ஆரம்பிச்சோம். அரிசி, கடலைப் பருப்புகளை மொத்தமா வாங்கி வந்து அரைச்சி மாவு தயாரிச்சி, ஸ்வீட் செய்கிறோம். இந்த வேலையில பெரும்பாலும் பெண்கள்தான் ஈடுபடுறோம். வீட்டில் சும்மா இருக்கிறதுக்கு பதிலா நமக்கு தெரிஞ்ச தொழிலை செய்யலாமேன்னு செய்றோம். இதனால பெரிய லாபத்தை எதிர்பார்க்கல. ஏதோ குடும்பம் நடத்த சிலர் கூடுதல் தரத்துடன் ஸ்வீட் வேண்டும் என்று செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள், உயர்தரமான முந்திரி, நெய் ஆகியவற்றை வாங்கி தருகிறார்கள். அதற்கேற்றது போல் விலை வைத்து விற்பனை செய்கிறோம். இதில் பிகாம் படித்த எங்கள் மகன் சதீஷ்குமார், பிஏ படிக்கும் மகள் அனிதா ஆகியோரும் ஸ்வீட் தயாரிப்பில் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு தலைமுறை தாண்டி இந்த தொழிலில் நாங்கள் ஈடுபடுகிறோம்’ என்கிறார். தொகுப்பு:- அ.உ.வீரமணிபடங்கள்: ஆர். முபாரக் ஜான்

Related posts

வண்ண வண்ண கேண்டி… வகை வகையான கேண்டி!

மகத்துவம் மிகுந்த பாரம்பரிய உணவுகள்!

6 வகையான அசைவ தொக்கு… 3 வகையான அசைவ குழம்பு…