விதிமீறல் குவாரிக்கு ரூ.9 கோடி அபராதம்: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

மதுரை: விதிமீறல் குவாரிக்கு ரூ.9 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் சேர்ந்த குமாரவேலு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், திருமயம் தாலுகா வளையன்வயல் கிராமத்தில் 7 ஏக்கரில் நடத்தப்படும் கல் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கற்களை வெட்டி எடுத்துள்ளனர். இதனால், அரசுக்கு பல கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில் குவாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. அதை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, ‘‘விதிகளை மீறி கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குவாரி அளவீடு செய்யப்பட்டது. இதன்பேரில் ரூ.9 கோடி அபராதம் விதிக்கப்பட்டு, ஒரு மாதத்திற்குள் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், விதிமீறல் குவாரிக்கான அனுமதியை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், அபராத தொகையை வசூலிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அரசுத் தரப்பில்  பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்.2க்கு தள்ளி வைத்தனர்….

Related posts

தமிழ்நாட்டில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சிவகாசி அருகே வெடிவிபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர்

பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல், ஓராண்டாக ஆவணங்களை கிடப்பில் போட்ட துணைவேந்தரை கண்டித்து உயர்கல்வித்துறைக்கு ஆசிரியர் சங்கம் கடிதம்..!!