விடுதியில் ராகிங்கில் ஈடுபட்ட 9 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யாறு அரசு கல்லூரி முதல்வர் நடவடிக்கை ஜூனியர்களுக்கு சாட்டையடி வீடியோ எதிரொலி

 

செய்யாறு, ஏப்.27: செய்யாறு அரசு கல்லூரி விடுதியில் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்த வீடியோ வைரலானதால், சாட்டையால் அடித்த சீனியர் மாணவர்கள் 9 பேரை நேற்று சஸ்பெண்ட் செய்து கல்லூரி முதல்வர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் பொன்விழா கண்ட அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் காலை, மாலை என இரு சுழற்சிகளில் இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகள், ஆராய்ச்சி மற்றும் முனைவர் பட்டப்படிப்புகள் என சுமார் 8,500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். வெளியூர்களில் இருந்து கல்லூரி படிக்க வரும் மாணவர்கள் தினசரி வந்து செல்ல முடியாத பல மாணவ, மாணவிகள் அரசு விடுதிகளில் தங்கி படிப்பது வழக்கம். அதன்படி எஸ்சி, எம்பிசி, பிசி விடுதிகளில் ஆண், பெண் என தனித்தனி விடுதிகளில் தங்கி அனைத்து பிரிவு மாணவ, மாணவிகளும் சுமார் 500க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சீனியர் மாணவர்களான 9 பேர் சொன்ன வேலைகளை ஜூனியர் மாணவர்கள் சரியாக செய்யாததால் விடுதியில் உள்ள பெட்ஷீட்டுகளை சாட்டையை போல் டைட்டாக முறுக்கி 19 மாணவர்களையும் ஒருவர் பின் ஒருவராக நிற்க வைத்து சரமாரியாக அடித்துள்ளனர். இதை அடி வாங்கிய மாணவர் ஒருவர் வீடியோ எடுத்து சக நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இச்சம்பம் குறித்து கல்லூரி முதல்வர் ந.கலைவாணி கூறியதாவது: ஆதிதிராவிடர் நலவிடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களில் சீனியர் மாணவர்கள் ராகிங் மூலம் துன்புறுத்துவதாக முதலாம் ஆண்டு மாணவர்கள் புகார் அளித்ததின் பேரில் சமூக ஊடகங்களில் இது தொடர்பான வீடியோக்கள் வந்தன. பாதிக்கப்பட்ட மாணவர்களின் புகாரின் அடிப்படையில் ராகிங் தடுப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களின் விசாரணையின் அடிப்படையில் ராகிங் செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பது தெரிய வந்தது. மேலும் விசாரணை செய்யும் பொருட்டு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் கல்லூரி ஆட்சி மன்ற குழு தீர்மானத்தின்படி முதலாமாண்டு மாணவர்களை அடித்து ராகிங் செய்த 2ம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவரும், 3ம் ஆண்டு மாணவர்கள் 8 பேர் என 9 மாணவர்களையும் ஒரு மாத காலம் தற்காலிகமாக இடை நீக்கம் செய்து (சஸ்பெண்ட்) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அம்மாணவர்கள் இந்த காலகட்டத்தில் கல்லூரி மற்றும் விடுதிக்குள் வருதல் கூடாது என அறிவுறுத்தப்பட்டு அந்த மாணவர்களிடம் இடைநீக்கம் செய்யப்பட்ட கடிதம் இன்று (நேற்று) வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்