வாட்ஸ் அப் வதந்தியால் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பெண்கள்

விழுப்புரம், ஆக. 18: அரசு திட்டம் தொடர்பாக வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தியை நம்பி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைதிட்டத்தில் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே மனுக்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவித்து ஏற்கனவே பலர் இ-சேவைமையங்களில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் 17, 18, 19ம் தேதிகளில் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முகாம் நடைபெறுகிறது, விண்ணப்பங்கள் பெறப்படுகிறது என்று வாட்ஸ்அப் போன்ற சமூகவலைதளங்களில் தகவல் பரவியுள்ளது.

இதனை நம்பி நேற்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலைஞர் உரிமைதிட்டத்தில் விண்ணப்பிக்க அதற்கான மனுக்கள் பூர்த்தி செய்து குவிந்தனர். ஆனால் ஆட்சியர் அலுவலகத்தில் அப்படியொரு முகாம் நடைபெறவில்லை என்றதும் அதனை கேட்டு பெண்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட அவர்கள் பலமுறை விண்ணப்பித்தும் எங்களுக்கு கலைஞர்மகளிர் உரிமைதொகை திட்டத்தில் உதவித்தொகை வழங்கப்படவில்லை என்று கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தொடர்ந்து வருவாய்துறை அலுவலர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விடுபட்டவர்கள் விண்ணப்பிக்க காலநேரம் குறித்து அரசு அறிவிக்கும். எனவே பொதுமக்கள் கலைந்துசெல்லுமாறு கூறினர். ஆனால் இதனை ஏற்கமறுத்த பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் முகாம் நடைபெறுவதாக வந்த செய்தி வதந்தி எனவும், பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம் என்று நோட்டீஸ் ஒட்டியபிறகு பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்