வாடகைத்தாய் முறை என்றால் என்ன… சட்டம் என்ன சொல்கிறது!

நன்றி குங்குமம் டாக்டர் சரகோஸி எனப்படும் வாடகைத்தாய் முறை என்பது இந்தியாவில் பல ஆண்டுகளாகப் பின்பற்றி வரும் ஒன்று. அதே சமயம், இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் அவ்வப்போது விவாதங்களும் நடந்து வருகின்றன.காரணம், இந்தியாவில் இருக்கும் பெண்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வெளிநாட்டவர்கள் அதிகம் விரும்பும் நிலையில் வாடகைத் தாய் மார்க்கெட் இந்தியாவில் மிகப்பெரியதாக இருந்தது. அந்த வகையில், கடந்த 2005-2015 வரை இந்தியாவில் வெளிநாட்டுத் தம்பதிகளுக்காக 25 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளன. இதையடுத்து 2015ல் வெளிநாட்டினர் இந்தியாவில் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் இந்தியாவுக்கு உள்ளே இரண்டு வகையான வாடகைத்தாய் முறைகள் உள்ளன.முதல் முறை பாரம்பரிய முறை (Surrogacy in the traditional sense) அதாவது பாரம்பரிய வகை. இந்த வகை மூலம் தம்பதியில் ஆணின் விந்தணு எடுக்கப்பட்டு வாடகைத்தாய் செயற்கையான முறையில் கருவூட்டப்படுகிறார். இதில் வாடகைத்தாய்தான் குழந்தையின் உயிரியல் தாய். ஆனால் அந்த ஆணின் மனைவி சட்ட ரீதியாக தாயாகக் கருதப்படுவார். இதற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுவிட்டது. இரண்டாவது முறை கர்ப்பக்கால வாடகைத் தாய் (Gestational surrogacy) எனப்படும் முறை. இந்த முறையில் ஆணின் விந்தணு, அவரின் மனைவியின் கருமுட்டையுடன் சேர்ந்து கருவாக உருவாக்கப்படும். பின்னர் அந்த கரு வாடகைத் தாயின் வயிற்றில் சேர்க்கப்படும். இதுதான் கர்ப்பகால வாடகைத் தாய்முறை. இதற்குத் தடை இல்லை. இந்த முறையின்படி, கருவுற முடியாத பெண்கள் மட்டும் குழந்தை பெற்றுக்கொள்ள இந்தியாவில் அனுமதி உள்ளது. இந்நிலையில், மக்களவையில் 2019ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதியன்று வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு, 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் 2022 ஜனவரி மாதம் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டம் வாடகைத்தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்குச் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது.இந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளின் முக்கிய அம்சங்கள்:ஒரு பெண், தன் வாழ்நாளில் ஒருமுறைதான் வாடகைத்தாயாக இருக்க முடியும்.குழந்தை வேண்டுபவர்களுக்கும், வாடகைத்தாய்க்கும் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும். இந்தச் சான்றிதழை, மாவட்ட சுகாதார அதிகாரிகள் வழங்க வேண்டும்.வாடகைத்தாய் கர்ப்பம் தரிப்பதற்கு முன், பின் என 16 மாத கால இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும்.வாடகைத் தாயாக உள்ள பெண்ணின் வயது 25 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்.சம்பந்தப்பட்ட தம்பதிகளின் நெருங்கிய உறவுகள் மட்டுமே வாடகைத்தாயாக இருக்க வேண்டும்.வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதி அல்லது இருவரில் ஒருவர் குழந்தைப்பேறுக்குத் தகுதியான உடல்நிலை இல்லாதவராக இருக்க வேண்டும்.தம்பதியில், மனைவியின் வயது 23 வயதிலிருந்து 50 வயதுக்குள் இருக்க வேண்டும், கணவரின் வயது 26 வயதிலிருந்து 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.தம்பதி இந்தியராகவும், திருமணமாகி ஐந்து வருடங்கள் முடிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். தம்பதிக்கு ஏற்கெனவே குழந்தை இருக்கக் கூடாது.தத்துக் குழந்தையோ, வாடகைத்தாய் மூலம் பெற்றுக்கொண்ட வேறு குழந்தையோ இருக்கக்கூடாது.தம்பதிக்கு இயற்கையானமுறையில் பிறந்த குழந்தை இருந்து, அந்தக் குழந்தை குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது  மனநலம் குறைபாடு இருந்தாலோ, மாவட்ட மருத்துவக் குழுமத்திடம் அதற்கான சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.திருமணமாகாமல் சேர்ந்து வசிப்பவர்கள், தன்பாலின உறவாளர்கள், கணவன் அல்லது மனைவி இல்லாமல் தனித்து வாழ்பவர்கள், ஏற்கெனவே குழந்தை பெற்றுக்கொண்ட தம்பதிகள் ஆகியோர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதியில்லை ஒரு பெண் பணத்துக்காகவே வாடகைத்தாய் ஆகமுடியாது; வணிகரீதியிலான வாடகைத்தாய் முறைக்கு இந்தியாவில் தடை உள்ளது. அதாவது, தன்னலமற்ற நோக்கத்துடனேயே இதனைச் செய்ய வேண்டும் என இச்சட்டம் சொல்கிறது.ஒரு தம்பதிக்காக வாடகைத்தாயாக இருந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண், குழந்தை பிறந்த பிறகு அவர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும். பின்னர், உரிமை ஏதும் கோரக்கூடாது.இந்தியாவில் சட்ட விரோதமாக வாடகைத்தாய் மூலமாகக் குழந்தைபெற உதவுபவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.தொகுப்பு : ஸ்ரீதேவி குமரேசன்

Related posts

ஹெட்போன், இயர்போன் எச்சரிக்கை!

மஞ்சள் இயற்கை 360°

அதிகரிக்கும் லேட் நைட் உணவுகள்… காத்திருக்கும் ஆபத்துகள்!