வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்களை அகற்றலாமா?.. உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்களுக்கு பதிலாக வேட்பாளர்களின் பெயர், கல்வித் தகுதி போன்றவற்றை பதிப்பது தொடர்பாக, அட்வகேட் ஜெனரலின் கருத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது. பாஜ.வைச் சேர்ந்த வழக்கறிஞரான அஸ்வினி உபாத்யாய் தொடர்ந்த இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்ஏ.பாப்டே, தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அவர் தனது மனுவில், ‘வாக்குச்சீட்டு, வாக்குப்பதிவு இயந்திரத்தில் கட்சியின் சின்னங்களுக்குப் பதிலாக வேட்பாளரின் பெயர், வயது, கல்வித் தகுதி, புகைப்படம் போன்றவை குறிப்பிட வேண்டும். தேர்தல் ஆணையத்துக்கு இது தொடர்பாக அனுப்பப்பட்ட கடிதத்துக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை,’ என்று கூறியுள்ளார். ‘சின்னம் இடம் பெறுவது எந்த விதத்தில் ஆட்சேபகரமாக உள்ளது?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் அதற்கு உபாத்யாயின் வழக்கறிஞரான விகாஷ் சிங் அளித்த பதிலில், ‘ஊழலுக்கும், குற்ற நடவடிக்கைக்கும் அரசியலில் சின்னம்தான் முக்கிய காரணமாக உள்ளது. கட்சித் தலைவர்கள் இதனாலேயே ஒரு சர்வாதிகாரி போல் நடந்து கொண்டு வேட்பாளர்களைத் தேர்வு செய்கின்றனர். ,’ என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்கில் பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உடனடியாக நோட்டீஸ் அனுப்ப முடியாது. புகார் மனுவின் பிரதியை அட்டர்னி ஜெனரல் கே.கே வேணுகோபால், கூடுதல் ெசாலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு வழங்க வேண்டும். அவர்களின் கருத்து இதில் முக்கியம். அவர்களின் கருத்துகளை பெற்ற பிறகு, அடுத்த முடிவு எடுக்கப்படும்,’ என தெரிவித்தனர். இந்த வழக்கு மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது….

Related posts

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் என்கவுண்டர்

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்

நாடாளுமன்றம் 22ம் தேதி கூடுகிறது ஜூலை 23ல் ஒன்றிய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்