வாகன தணிக்கையின் போது உரிய ஆவணமில்லாத ₹14.75 லட்சம் பறிமுதல்: வருமான வரித்துறை விசாரணை

பெரம்பூர், ஆக. 4: வியாசர்பாடியில் உரிய ஆவணமின்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ₹14 லட்சத்து 75 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது ஹவாலா பணமா, என வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வியாசர்பாடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கிருபாநிதி தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் வியாசர்பாடி அசோக் பில்லர் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதலளித்தார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் இருசக்கர வாகனத்தில் இருந்த பையை சோதனை செய்தனர். அதில், ₹14 லட்சத்து 75 ஆயிரம் இருந்தது. இதுதொடர்பாக விசாரித்ததில், இருசக்கர வாகனத்தில் வந்தவர் சவுகார்பேட்டை மின்ட் தெருவைச் சேர்ந்த மோகன்லால் என்பதும், கலெக்‌ஷன் ஏஜென்ட் வேலை செய்வதாகவும் கூறினார். ஆனால், அந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால், போலீசார் மோகன்லாலை பிடித்து, பணத்துடன் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது ஹவாலா பணமா? என்கிற கோணத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது