வரதராஜபெருமாள் கோயிலுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மாயம்: ஆர்டிஐ தகவலால் பக்தர்கள் அதிர்ச்சி

சென்னை: காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலங்கள் மாயமாகிவிட்டதாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். காஞ்சிபுரத்தில் ஏராளமான சைவ, வைணவ கோயில்கள் உள்ளன. இதில் அத்தி வரதர் வைபவம் நடந்த வரதராஜ பெருமாள் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள், காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் சென்னை உள்பட பல இடங்களில் உள்ளன. இந்த சொத்துக்கள், அறநிலையத்துறை அதிகாரிகளால், முறையாக பராமரிக்கவில்லை என பக்தர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது. தமிழகத்தில் கோயில்களுக்கு சொந்தமான சொத்து விவரம், வாடகைக்கு விடப்பட்டுள்ள இடங்கள், வாடகை பாக்கி உள்பட பல விவரங்கள் அனைத்து பக்தர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் கோயில் வளாகத்தில் விளம்பர பலகை வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் ஒரு வழக்கின் தீர்ப்பில் அறிவுறுத்தியது. அதன்படி காஞ்சிபுரத்தில் பல்வேறு கோயில்களில் பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டன. ஆனால் வரதராஜபெருமாள் கோயிலில் மட்டும், சொத்து விவரம் அடங்கிய விளம்பர பலகை வைக்கவில்லை. இது தொடர்பாக கடந்த 2019 மே 31ம் தேதி காஞ்சிபுரத்தை சேர்ந்த டில்லிபாபு என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார். அதில், கோயில் நிர்வாகம் சார்பில் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு 448.43 ஏக்கர் நிலம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கடந்த மாதம் 16ம் தேதி காஞ்சிபுரத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார். அதற்கு, வரதராஜ பெருமாள் கோயிலுக்கு 177.20 ஏக்கர் நிலம் உள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளில் வரதராஜ பெருமாள் கோயில் சொத்துக்களில் 269.23 ஏக்கர் நிலம் மாயமாகிவிட்டது என தெரியவந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டம்தானே என்று பதில் அளிக்கப்பட்டுள்ளதா அல்லது நிலம் மாயமாகி உள்ளதா என காஞ்சிபுரத்தில் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போது தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை சார்பில் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டு வருவதுபோல் வரதராஜ பெருமாள் கோயில் சொத்துக்கள் மாயமான விவகாரத்திலும் இந்துசமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்