வண்டியூர் கால்வாயை சுத்தம் செய்ய வழக்கு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

 

மதுரை, செப். 1: மதுரையில் உள்ள வண்டியூர் கால்வாயை சுத்தம் செய்யக் கோரிய வழக்கில், அரசுத் தரப்பில் பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை கோ.புதூரைச் சேர்ந்த பன்னீர்செல்வம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை எதிரில் அமெரிக்கன் கல்லூரி, அரசு மருத்துவக் கல்லூரி, இந்திய மருத்துவ கழகம், அரசு பல்நோக்கு மருத்துவமனை, அரசு மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் உள்ளது. இதன் முன்பு வண்டியூர் கால்வாய் செல்கிறது.

இந்தக்கால்வாய் சில இடங்களில் மூடப்பட்டும், சில இடங்களில் மூடப்படாமலும் உள்ளது. தற்போது கால்வாயில் குப்பைகள் குவிந்தும், கழிவுநீர் நிரம்பியும் அசுத்தமாக காணப்படுகிறது. கால்வாயின் சுற்றுச்சுவர் தரையோடு தரையாக இருப்பதால் பொதுமக்கள் பலர் கால்வாய்க்குள் விழுந்து காயமடைகின்றனர். இந்தக் கால்வாய் கொசு உற்பத்தி மையமாக செயல்படுகிறது. இதனால் அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருவோர் மேலும் நோய் பாதிப்புக்கு ஆளாகும் நிலை உள்ளது.

எனவே, மதுரை அரசு ராஜாஜி மருத்துவனைக்கு எதிரில் செல்லும் வண்டியூர் கால்வாயை தூர்வாரி சுத்தப்படுத்தி பாதுகாக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர், மனுவிற்கு அரசுத் தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை செப்.5க்கு தள்ளி வைத்தனர்.

Related posts

மெட்ரோ ரயில் பணியால் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் புதிய இணைப்பு சாலைகள்: சாத்தியக்கூறுகள் ஆய்வு

புழல் சிறையில் கைதிகளை சந்திப்பதற்கு புதிய நடைமுறை எதிர்த்து வழக்கு

ெசன்னை துறைமுகத்தில் இருந்து ₹35 கோடி மதிப்பு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்திய வழக்கில் மாநகர பஸ் டிரைவர் கைது