வடிகால் ஓடை இல்லாததால் கிராம வீதிகளில் ஆறாக ஓடும் மழைநீர்-பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தா.பழூர் : தா.பழூர் அருகே வடிகால் ஓடை இல்லாததால் கிராம வீதிகளில் மழைநீர் ஆறாக ஓடுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிங்கராயபுரம், கோட்டியால் கிராமங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சரியான வடிகால் வசதி இல்லாத காரணத்தினால் வீதிகளையும், பொது இடங்களையும் ஆறுகளாக மாற்றி மழைநீர் செல்கிறது. நேற்று முன்தினம் இரவு அரியலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் சிங்கராயபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும், வயல் வெளியில் இருந்து மழை நீர் வடிய வடிகால் வசதி இல்லாத காரணத்தால் கிராமங்களில் உள்ள வீதிகளில் புகுந்து பொது இடங்களை சூழ்ந்து சாலைகளில் சென்றதால் பொதுமக்கள் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது‌.மேலும் இந்த மழை நீரானது சிங்கராயபுரத்தில் இருந்து வயல்வெளிகள் வழியாக மீண்டும் கோட்டியால் கிராமத்தில் புகுந்து சாலைகளை ஆக்கிரமித்து செல்கிறது. இதனால் கிராமங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. வீடுகளை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு வீதியில் தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக மழைநீர் கிராமங்களை சுழ்ந்து செல்லாமல் ஓடை வழியாக மழைநீர் செல்ல வடிகால்களை சரிசெய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி இனி வரும் காலங்களில் மழைநீர் ஊருக்குள் புகாமல் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்