லா…லா… என சோக கீதம் பாடும் மந்திரியின் ரத்த சொந்தம் பற்றிய கதையை சொல்கிறார்: wiki யானந்தா

‘இலை கட்சி வேட்பாளர் தேர்வுல சின்னாபின்னமாகி கிடக்கும் சிவகங்கையே நிர்வாகிகளின் ஒற்றுமையை பற்றிச் சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வேட்பாளர் லிஸ்ட்ல நம்ம பேரு இருக்குமா… இருக்காதா என்று சிவகங்கை இலை கட்சியினர் கவலையில் இருக்காங்களாம். அதுலேயும் சிட்டிங் மக்கள் பிரதிநிதிகளின் நிலைமைதான் படுமோசமாக இருக்காம். எம்எல்ஏக்கள்… இவர்களை பற்றி அதிருப்தி கோஷ்டியினர், ஏகப்பட்ட பெட்டிஷன்களை தலைமையிடத்துக்கு தட்டிவிட்டு இருக்காங்களாம்… ஏற்கனவே மாவட்டத்துல இருக்காரா, இல்லையான்னே தெரியாம ஒரு அமைச்சர். இவரை போலவே செயல்படும் இலை கட்சி எம்எல்ஏக்கள் மீது பொதுமக்களும் கடும் அதிருப்தியில இருக்காங்களாம்…. இவர்களுக்கு சீட் தரக்கூடாதுன்னு, இலைக்கட்சிக்குள்ளே கண்டனக்குரல் ஓங்கி ஒலிக்கிறதாம்… கடந்த முறை ‘சிறைபறவை’ ஆதரவோடு சீட் வாங்கிய 2 மக்கள் பிரதிநிதிகளுக்கு கண்டிப்பாக மறுவாய்ப்பு இருக்காதுன்னு பேசிக்கிறாங்க… இதனால, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை தொகுதியில் நிற்க கடும் போட்டியாம். ‘கடந்த முறை அவர் இவ்வளவு சம்பாதித்தார்… இந்த முறை நின்றால் ஓட்டு விழாது’ என்றெல்லாம் இலைக்கட்சியில் எதிர்கோஷ்டி கிளப்பி விடுறதால, தலைமையை சரிக்கட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள் முயற்சிக்கின்றனராம்… அப்படியே சீட் கொடுத்தால் உள்ளடி வேலை பார்த்து தோற்கடித்தே தீரவேண்டும் என்றும், இலைக்கட்சி எதிர்தரப்பு கங்கணம் கட்டி திரியுதாம்… இதனால இந்த முறை சிவகங்கை மாவட்டத்துல சீட்டு வாங்க மட்டுமல்ல… அதற்குப் பிறகும் களத்தில் கடும் மல்லுக்கட்டு இருக்கும்னு பேசிக்கிறாங்கப்பா..’’ என்றார் விக்கியானந்தா.‘‘விழுமியமான மாவட்டத்துல லா… லா… மந்திரி சோக பாட்டு பாடும் நிலை தான் இருக்காமே, அவரது ரத்த சொந்தம் நடத்திய விசாரணையில் அந்த தகவல் தெரியவந்ததாமே, அப்படியா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘விழுமியமான மாவட்டத்துல எலக்‌ஷன் இப்போதே களைகட்ட தொடங்கிவிட்ட விஷயத்தை சொல்றேன் கேளு… லா… லா… என்று மந்திரி ஒருவர் சோக கீதம் பாடத் தொடங்கி இருக்கிறாராம்.  மூன்றாவது முறையாக விழுமியமான தொகுதியில் மீண்டும் போட்டியிட போறாராம், அதற்கான வேலையை தன் ரத்த சொந்தம் மூலம் ஆரம்பித்துவிட்டாராம். ஒவ்வொரு தேர்தல்லயும் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்து, தம்பியை ஜெயிக்க வைக்கும் பணியை, அவரது ரத்த சொந்தம் கச்சிதமாக செய்து முடிப்பாராம். வர உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி விழுமியமான தேர்தல் பணிகளை துவக்கிய அவரது ரத்த சொந்தம் இப்போது இலை கட்சியினரை பண மழையில் நனைத்து வருகிறாராம். அதிக வாக்குகள் உள்ள விழுமியம் நகரில் கட்சியினரை விட்டு வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி இருக்காங்க, சாதக பாதக ஓட்டுகள் நமக்கு எப்படி என்று எடுத்த சர்வேயில் அமைச்சருக்கு பாதகமே அதிகம் என்று தெரிய வந்ததாம். கட்சியினரும் சரியாக செயல்படவில்லை, பெருநகரத்தில் கட்சியில் உள்ளவர்கள் மாற்றுக் கட்சிக்கு செல்ல மேலும் அமைச்சர் தரப்பு அதிருப்தியில் இருக்காங்களாம். இந்த நிலையில் அமைச்சர் வீட்டிற்கு சென்ற பெருநகர செயலாளரும், மாஜி சேர்மனுமான பாசை பிடிச்சு லெப்ட், ரைட்டு வாங்கிவிட்டாராம் ரத்த சொந்தம். என்னத்த கட்சி பண்றீங்க, உங்கள வெச்சிகிட்டு நாங்க எப்படி ஜெயிக்க போறோம். இனிமே இந்த வீட்டுக்குள்ள நிக்காதீங்க வெளியே போங்க என திட்டி அனுப்ப, கொந்தளித்துப் போன மாஜி சேர்மன் அங்கிருந்து கிளம்பி வந்து விட்டாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘எதிர்கட்சி வைத்தா உடனே அகற்றும் மாநகராட்சி அதிகாரிகள்… இலை கட்சியின் பேனரை மட்டும் அகற்றாமல் ஆட்டம் காட்டுவதை சொல்லுங்க..’’என்றார் பீட்டர் மாமா.‘‘பொங்கலை முன்னிட்டு ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் அறிமுகப்படுத்தினார். இதற்காக, திருவிக நகர் 6வது மண்டலத்துக்கு உட்பட்ட கொளத்தூர், பெரம்பூர், திருவிக நகர் பகுதிகளில் அதிமுகவினர் 40க்கும் மேற்பட்ட பேனர்களை ரேஷன் கடை முன்பு வைச்சு இருக்காங்க. இதனால் நீதிமன்ற உத்தரவை மீறி எப்படி பேனர் வைக்கலாமென பல சமூக ஆர்வலர்கள் காவல்துறையிடம் கேள்வி கேட்டாங்க. அதற்கு, இது மாநகராட்சி அதிகாரிகளின் வேலை என திருவிக நகர் மண்டல அலுவலகத்தை கைகாட்டிவிட்டாங்க, காவல்துறையினர். நாங்க ஏன் பேனர்களை அகற்றணும்.. இது காவல்துறையினரின் வேலை என கூறி தட்டி கழிச்சிட்டாங்களாம்…காவல்துறையினரிடம் கேட்டால், பேனர்களை அகற்றுவதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மாநகராட்சி அதிகாரிகள் புகார் கொடுத்தால் நாங்கள் பேனர்களை அகற்றுவோம் என்கின்றனர். ஆளுங்கட்சிக்கு எதிராக புகார் கொடுக்க மாநகராட்சி அதிகாரிகள் தயாராக இல்லை. இதனால் திருவிக நகர் மண்டலத்தில் நீதிமன்றத்தின் உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது…’’ என்றார் விக்கியானந்தா.‘‘கள்ளக்குறிச்சியில் கல்லா கட்டும் அதிகாரிகள் பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 20 பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிக்கும், 65 ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் நல விடுதிக்கும் சமையல் பணிக்கு தனித்தனியே நேர்முகத்தேர்வு நடந்தது. இதில் இரண்டுக்கும் சேர்த்து சுமார் 1600 நபர்களுக்கும் மேல் வந்து நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர். இந்த பணிக்கு தகுதியின் அடிப்படையில் வேலை என்பது கானல் நீராகி விட்டது. சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும், மாவட்ட அமைச்சரும் முடிவு செய்பவர்களுக்கே வேலை என்ற நிலை உள்ளது. இதனால ஒரு நபருக்கு 5 லட்சம் முதல் 8 லட்சம் வரை பேரம் பேசப்படுதாம். அதிலும் அதிகாரிகள் ஒரு பக்கமும், அமைச்சர் பேரை சொல்லி அரசியல்வாதிகள் ஒருபக்கமும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். படித்த இளைஞர்கள், இலை கட்சி என்றாலே பணம் இருந்தால்தான் வேலை என முணுமுணுக்கின்றனர்…’’ என்றார் விக்கியானந்தா. …

Related posts

பிரிந்தவர்களை இணைக்கும் முயற்சியில் துவண்டு போன மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

திருப்பதி லட்டு விவகாரத்தில் தாமரைக்கட்சிக்குள் நடக்கும் குடுமிபிடி சண்டை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

இலை தலைவர் போட்ட பொறுப்பாளரை பார்த்து நிர்வாகிகள் சிரிப்பாய் சிரிப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா