ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை

புழல்: சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்தப்படும் ரேஷன் அரிசி மூட்டைகள் அவ்வப்போது அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தல் ஆசாமிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, சோழவரத்தில் மட்டும் கடந்த 2 வாரங்களில் 200 டன் ரேஷன் அரிசியை பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் பறிமுதல் செய்துள்ளார். இதுதொடர்பாக, கடத்தல்காரர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை புறநகர் பகுதிகளில் ரேஷன் அரிசி பாலிஷ் செய்யப்பட்டு, வெளிச்சந்தையில் விற்பனைக்கு அனுப்பப்படுவது தெரியவந்தது. இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலமாக ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்தி செல்வதை தடுப்பது குறித்து, குடிமைபொருள் குற்றப்புலனாய்வு துறை எஸ்பி கீதா தலைமையில், உணவுபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் செங்குன்றத்தில் கடந்த  2 நாட்களுக்கு முன் நடைபெற்றது. கூட்டத்தில், பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் அரிசி ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு வாகனங்களில் கடத்தி செல்லப்படுவது, ரேஷன் கடைகளில் பிரிக்கப்படாத மூட்டைகள் தனியார் அரிசி ஆலைகளிலும், குடோன்களிலும் பதுக்கி வைக்கப்படுவதை தடுக்க வேண்டும், என்று உத்தரவிடப்பட்டது.பின்னர், ரேஷன் அரிசியை பாலிஷ் செய்து, கள்ள சந்தையில் விற்பனை செய்வதை தடுப்பது குறித்து அதிகாரிகளுக்கு எஸ்பி கீதா எடுத்துரைத்தார். இதுகுறித்து, அவர் கூறுகையில், ‘‘இனிவரும் நாட்களில் ரேஷன் அரிசி கடத்தலை முழுமையாக தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்’’  என்றார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை