ரூ.11.14 கோடி மதிப்பில் புதிய வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: புதிய வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ்ரூ.11.14 கோடி செலவில் 73 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார். முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், ஆண்டு முழுவதும் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானமும், வேலைவாய்ப்பும் கிடைக்கும் நோக்கத்துடன், “தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம்\” என்ற புதிய வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தை 2021-22ம் ஆண்டில் ரூ.11.14 கோடி மதிப்பில் செயல்படுத்திட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தேக்கு, ஈட்டி, மகோகனி, மருது, வேம்பு, மலை வேம்பு, நாவல்,  பெருநெல்லி,  செம்மரம்,  புங்கன், வேங்கை, சந்தனம்  போன்ற பல்வேறு தரமான மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும். நடப்பாண்டில், முதற்கட்டமாக 73 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும். இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசு வனத்துறையின் நாற்றங்கால்களில்ரூ.15 மதிப்புள்ள தரமான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இந்த மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களின் வரப்புகளிலோ அல்லது குறைந்த செறிவில் விவசாய நிலங்களிலோ நடவு செய்யலாம். வரப்பில் நடவு செய்வதாக இருந்தால், ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளுக்கு மிகாமலும், விவசாய நிலங்களில் குறைந்த செறிவில் நடவு செய்வதாக இருந்தால் ஏக்கருக்கு 160 மரக்கன்றுகளுக்கு மிகாமலும் வழங்கப்படும். மேலும், நடவு செய்த 2ம் ஆண்டு முதல் 4ம் ஆண்டு வரை நல்ல முறையில் பராமரிக்கப்படும் கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும்ரூ.7 வீதம் மூன்று ஆண்டுகளுக்குரூ.21 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். 73 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு விநியோகிப்பதன் துவக்கமாக விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் வழங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை இயக்குநர் நடராஜன், வேளாண்மை இயக்குநர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்….

Related posts

மாதவரம் – சோழிங்கநல்லூர், கலங்கரைவிளக்கம் – பூந்தமல்லி வழித்தடங்களில் இரட்டை அடுக்கு மேம்பாலம்: 2 ஆண்டுகளில் முடிக்க திட்டம்

வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ரூ.4.5 கோடியில் பூங்கா பேருந்து நிலைய பணி: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டம்

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி