ரூபாய் நோட்டுகளில் கடவுளின் புகைப்பட விவகாரம்; வகுப்புவாத புதைகுழிக்குள் இழுக்கும் தேர்தல் அரசியல்?: இந்தோனேசியாவை இந்தியாவுடன் ஒப்பிடும் கெஜ்ரிவாலுக்கு எதிர்ப்பு

புதுடெல்லி: ரூபாய் நோட்டுகளில் கடவுளின் புகைப்படம் அச்சிட வேண்டும் என்று டெல்லி முதல்வர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், இதுபோன்ற கருத்துகள் இந்திய அரசியலில் வகுப்புவாத புதைக்குழிக்குள் இழுத்து செல்லப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘130 கோடி இந்திய மக்களும், நாட்டின் நாணயத்தின் ஒருபுறம் காந்தியின் படமும், மறுபுறம் விநாயகர் மற்றும் லட்சுமியின் படமும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். நாட்டின் பொருளாதாரம் இன்று மிக மோசமான நிலையில் சென்று கொண்டிருக்கிறது. சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகும் வளரும் மற்றும் ஏழை நாடாகவே உள்ளது. நமது முயற்சிகள் பயனளிக்கும் சரியான கொள்கை மற்றும் கண்டிப்பாக இருக்க கடவுளின் ஆசீர்வாதமும் நமக்கு தேவை. கடின உழைப்பும், இறைவனின் ஆசியும் சங்கமித்தால்தான் நாடு முன்னேறும். இதுதொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி பகிரங்கமாக கூறினேன். இந்தோனேசியா போன்ற நாடுகள் இந்து கடவுள்களின் படங்களை ரூபாய் நோட்டில் அச்சிட்டுள்ள நிலையில், இந்தியா ஏன் செய்ய முடியாது? இந்த விவகாரத்தில் பொதுமக்களிடம் அமோக ஆதரவு உள்ளது. எனவே ரூபாய் நோட்டுகள், நாணயங்களில் விநாயகர், லட்சுமியின் படத்தை வெளியிட வேண்டும்’ என்று அதில் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் இந்த கருத்தை தெரிவித்த உடனேயே, தேர்தல் வந்த உடன் அரவிந்த் கெஜ்ரிவால் இந்துவாக மாறுவதாக பாஜக விமர்சனம் செய்தது. அதே நேரத்தில் ரூபாய் நோட்டில் இயேசு, முகமது நபி உள்ளிட்டோர் படங்களையும் சேர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது. ஒரு பக்கம் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளில் கடவுள்களின் படம் தேவையா? அதனால் நாட்டின் பொருளாதாரம் உயருமா? போன்ற பல கேள்விகளும், கண்டனங்களும் எழுப்பப்படுகின்றன. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, எந்த ஒரு அரசியல் கட்சியும் மதத்தையோ அதன் சின்னங்களையோ வாக்குகளுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்பதே அடிப்படையாக உள்ளது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு; இங்கு ஆட்சி அல்லது அரசியலுக்காக மதத்தினை பயன்படுத்தக் கூடாது. ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் புகைப்படம் உள்ள நிலையில் கடவுள்களின் படம் தேவை என்ற வாதம் புதிய சர்ச்சைகளை கிளப்பி உள்ளது. தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளில் சில மதங்கள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த மதங்களின் சின்னங்கள் கொண்ட நாணயமும் புழக்கத்தில் உள்ளது. அதனால் இந்திய ரூபாய் நோட்டுகளிலும் கடவுள்களின் படங்கள் இருக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இந்தோனேசியாவில் ஆறு மதங்கள் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள மக்கள்தொகையில் சுமார் 87 சதவீதம் பேர் முஸ்லிம்கள்; அதிக மக்கள் தொகை கொண்ட முஸ்லீம் நாடாகவும் உள்ளது. அங்குள்ள மக்கள் தொகையில் 1.7 சதவீதம் மட்டுமே இந்துக்கள் உள்ளனர். இருந்தும் அந்த நாட்டு கரன்சிகளில் சிவன், விநாயகர் போன்றவர்களின் படங்கள் காணப்படுகின்றன. ஆனால், அரசியல் சாசனத்தின்படி இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இந்திய ரூபாய் நோட்டுகளில் மதச் சின்னங்களை கொண்டு வந்தால், அது வகுப்புவாத அரசியலின் புதைகுழிக்குள் கொண்டு சென்றுவிடும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். தேர்தல் அரசியலுக்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதுபோன்ற சர்ச்சை விஷயங்களை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சில அரசியல் கட்சித் தலைவர்களால் அவ்வப்போது கூறப்படும் மதவாத கருத்துகள் பெரும் சர்ச்சைகளை கிளப்பி வரும் நிலையில், ரூபாய் நோட்டு விவகாரம் மேலும் புதிய சர்ச்சைகளை கிளப்பி உள்ளது….

Related posts

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!

10 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

நீட் கலந்தாய்வு ஒத்திவைப்பு மூலம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி: பிரதமர் மோடி, ஒன்றிய கல்வி அமைச்சருக்கு காங்கிரஸ் கண்டனம்