ராமநாதபுரம் பெருவயல் பகுதிக்கு கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் தகவல்

 

ராமநாதபுரம், ஜூன் 1: ராமநாதபுரம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வு செய்தார். பெருவயல் ஊராட்சியில் 15வது நிதிக்குழு கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2.96 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை, அதே பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரை நீர்தேக்க தொட்டி, ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உணவு பாதுகாப்பு கிடங்கு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து பெருவயல் பகுதிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் வழங்கப்படும் குடிநீர் முழுமையாக கிடைப்பதற்கேற்ப நடவடிக்கை எடுப்பதுடன், கூடுதலாக ஆழ்துளை கிணறு அமைத்து தடையின்றி குடிநீர் வழங்க அலுவலர்கள் திட்டமிடுதல் வேண்டுமென அறிவுறுத்தினார். பின்னர் பெருவயல் பகுதிக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெற ஏதுவாக காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க வேண்டுமென பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். அதற்கு கலெக்டர், கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த ஆய்வின் போது ராமநாதபுரம் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தாமரை செல்வி, முருகானந்தவள்ளி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை