ரயில் மோதி யானைகள் இறப்பு விவகாரம் ரயில் இன்ஜினில் பயணம் செய்து ஐகோர்ட் நீதிபதிகள் குழு ஆய்வு

கோவை: கோவையில் ரயில்கள் மோதி யானைகள் உயிரிழக்கும் விவகாரம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழுவினர் நேற்று போத்தனூரில் இருந்து வாளையாறு வரை ரயில் இன்ஜினில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டனர். கோவை-வாளையாறு இடையே ஏ மற்றும் பி என 2 தண்டவாளங்கள் உள்ளன. இதில், கடந்தாண்டு நவம்பர் 26ம் தேதி ரயில் மோதி 3 காட்டு யானைகள் பலியாகின. காட்டு யானைகள் இறந்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார், சுப்பிரமணியன், இளந்திரையன் ஆகியோர் நேற்று கோவை வந்தனர்.இவர்கள் போத்தனூரில் இருந்து வாளையாறு வரை ஒரு ரயில் இன்ஜினில் பயணம் செய்து ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள், கடந்த காலங்களில் காட்டு யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்த இடங்களில் அந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தனர். குறிப்பாக, நவக்கரை அருகே கடந்த ஆண்டு 3 யானைகள் அடிபட்டு இறந்த சம்பவம் குறித்து லோகோ பைலட் மற்றும் ரயில்வே அதிகாரிகள், நீதிபதிகளிடம் விளக்கினர். இந்த ஆய்வின் போது நீதிபதிகள், ரயில்வே தண்டவாள பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள சோலார் விளக்குகள் குறித்து ஆய்வு செய்தனர். வாளையாறு ரயில் நிலையத்தில் நீதிபதிகள், பாலக்காடு ரயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் ரகுமான், கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, தமிழகத்தில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் காட்டு யானைகள் இறக்கின்றன. இதனால், அடுத்த 10 ஆண்டுகளில் காட்டு யானைகள் அழிவின் விளிம்பிற்கு சென்று விடும். எனவே, காட்டு யானைகளை பாதுகாக்க வெளிநாட்டில் இருந்து யானை நிபுணர்களை வரவழைத்து ஆலோசனை பெற்று செயல்படும்படி அறிவுறுத்தினர்….

Related posts

புதுச்சேரி அரசின் சிறந்த படமாக ‘குரங்கு பெடல்’ தேர்வு

நாகையில் சிபிசிஎல் நிறுவனத்தின் நுழைவாயில் முன்பு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்

வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை