ரயில் முன் பாய்ந்து வாலிபர் சாவு தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரி மாணவன் கைது

சென்னை: ரூட் தல பிரச்னையில் மாணவன் தற்கொலை செய்த வழக்கில், தற்கொலைக்கு தூண்டியதாக, கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.  திருநின்றவூர் ரயில் நிலையத்தில் கடந்த 28ம் தேதி சென்னையில் உள்ள ஒரு கல்லூரி முதலாண்டு மாணவன் குமார் (18) என்பவரை, மற்றொரு கல்லூரி மாணவர்கள் 8 பேர் ராகிங் செய்து கொடுமைப்படுத்தினர். இதனால் விரக்தியடைந்த குமார், அந்த கல்லூரி மாணவர்கள் போட்ட உயிர் பிச்சையில் தன்னால் வாழ முடியாது என சக மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு ஆடியோ பதிவை வெளியிட்டார். மேலும், அன்று மாலை 6 மணியளவில் திருநின்றவூர் ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக திருவள்ளூர் ரயில்வே இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, எஸ்ஐக்கள் ரவிச்சந்திரன், கிரி ஆகியோர் வழக்கு பதிவு செய்து, மாணவன் குமாரை தற்கொலைக்கு தூண்டிய மற்றொரு கல்லூரி மாணவர்கள் 8 பேரை வலைவீசி தேடி வந்தனர்.இந்நிலையில் ராகிங்கில் ஈடுபட்ட கல்லூரியின் 2ம் ஆண்டு பிஎஸ்சி மாணவன் திருநின்றவூர் அடுத்த ராஜாங்குப்பத்தை சேர்ந்த மனோஜ் (18) என்பவரை, போலீசார் நேற்று கைது செய்து விசாரித்தனர்.  அதில், மனோஜ் உள்பட 8 மாணவர்கள், குமாரை அழைத்து சென்று முட்டி போட வைத்து கிண்டல் செய்துள்ளனர். குமார் தற்கொலை செய்து கொள்வார் என நினைக்கவில்லை என அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.  தொடர்ந்து அவரை  கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அந்தக் கல்லூரி மாணவர்கள் 7 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்….

Related posts

துணை முதல்வராவதற்கு தகுதியுடையவர் உதயநிதி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

மின் வயர் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து: 5 பேர் உயிர் தப்பினர்

10 மாதமாக சம்பளம் நிலுவை தேர்தல் பணியாளர்கள் தவிப்பு